சென்னை என்கவுன்ட்டர் குறித்து சிபிசிஐடி விசாரணை

சென்னை: வங்கிக் கொள்ளையர்கள் என நினைத்து சென்னை போலீஸார் என்கவுன்ட்டர் நடத்தி 5 பேர் கொல்லப்பட்டது பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவர் என்று தமிழக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னை என்கவுன்ட்டர் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவையில் எதிரொலித்த இச்சம்பவம் தொடர்பாக பீகார் மாநில அரசு உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த சென்னைக்கு வருகை தர உள்ளனர்.

தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் சென்னை காவல்துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

என்கவுன்ட்டர் நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் 5-ல் 4 போலியானவை என்று தற்போது அம்பலமாகியுள்ளது.

மேலும் வங்கிக் கொள்ளைக் கும்பல் தலைவனான சுஜைகுமார் என்ற வினோத்குமாரின் 2 விரல்கள் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் பறிபோனதாக அவனது பெற்றோர் கூறிய தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வினோத்குமார் என்ற சுஜைகுமார் ஏதேனும் ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடுமோ என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழகக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Comments