விஜயகாந்த்தை சஸ்பெண்ட் செய்தது மரபை மீறிய செயல்: அன்பழகன்

தஞ்சாவூர்: சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை சஸ்பெண்ட் செய்தது மரபை மீறிய செயல் என்று திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் திமுக பொதுக் குழு விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக பொறுப்புக்கு வந்த 8 மாதங்களில் ரூ. 4,500 கோடிக்குப் புதிய வரிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், பால் விலை உயர்வும், பேருந்துக் கட்டண உயர்வும் தேவையற்றது.

மக்கள் நலப் பணியாளர்கள் திமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், அவர்களை அதிமுக அரசு பணி நீக்கம் செய்துள்ளது. அதே போல, சமச்சீர் கல்வித் திட்டத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அரசு மாறும் போது மற்ற திட்டங்களைக் கைவிடுவது போல கல்வித் திட்டத்தையும் கைவிட நினைப்பது தவறு.

சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் பதவி என்பது ஜனநாயக ரீதியாக முதல்வர் பதவிக்கு இணையானது. ஆனால், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் முதல்வரை எதிர்த்துப் பேசினார் என்பதற்காக அவரை இந்தக் கூட்டத் தொடரில் இடைநீக்கம் செய்துள்ளனர். இது தவறு, மரபு மீறிய செயல். அவருக்கான அரசு சலுகைகளை 10 நாட்களுக்கும் ரத்து செய்ததும் மிகப் பெரிய தவறு.

சட்டசபைக்கு திமுக தலைவர் கருணாநிதி வரவில்லை என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அவர் சட்டசபைக்கு எளிதாக, சக்கர வண்டியில் வரும் வகையில், பாதை வசதி செய்து தராமல், இவ்வாறு குறை கூறுவது எந்த வகையில் நியாயம்? என்றார் அன்பழகன்.

Comments