சசிகலா காலத்தில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் டிரைவர்கள், பி.ஏக்களை மாற்ற ஜெ. உத்தரவு?

சென்னை: தமிழக அமைச்சர்கள் அனைவரின் பி.ஏ.க்கள் மற்றும் டிரைவர்களை உடனடியாக மாற்றுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் குறிப்பாக, 27 பேர் சசிகலா ஆதரவு அதிகாரிகளால் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இவர்கள் முக்கிய கட்சி ஒன்றுக்கு அமைச்சர்களின் செயல்பாடுளை உளவு பார்த்துச் சொல்லி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதையடுத்தே அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாக மாற்றி விடுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா மற்றும் ராவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த பி.ஏக்கள் மற்றும் டிரைவர்களை கோட்டையில் உள்ள மூன்று முக்கிய அதிகாரிகள் நியமித்ததாக கூறப்படுகிறது. இவர்களில் இருவர் பெண் அதிகாரிகள். இந்த மூன்று பேருமே முதல்வர் ஜெயலலிதா அலுவலகத்திற்கு மிக அருகில் இருந்துதான் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஜெயலலிதா காதுகளுக்கு செய்தி போனதைத் தொடர்ந்து தற்போதைய அதிரடி மாற்றத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் டிரைவர் மற்றும் பிஏ ஆகியோர் பெண் ஒருவரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது அவர்கள் ராவணனுடன் இணைந்து செயல்பட்டு பண மோசடியில் ஈடுபட்டதாக இன்னொரு வழக்கிலும் சிக்கியுள்ளனர்.

டிரைவர்கள், பி.ஏக்கள் மட்டத்தில் ஊடுறுவியுள்ள சசிகலா மற்றும் முக்கியக் கட்சியின் உளவாளிகளை விரட்டும் நடவடிக்கையின் முதல் கட்டமாக இது பார்க்கப்படுகிறது. இதனால் அமைச்சர்களின் பி.ஏக்களும், டிரைவர்களும் பெரும் பிதியில் உள்ளனராம்.

இது போக இந்த டிரைவர்களையும், பி.ஏக்களையும் பணியில் நியமித்த அதிகாரிகள் மீதும் அடுத்தகட்டமாக விசாரணை அம்பு பாயும் என்றும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Comments