கடத்தல்காரர்கள் இருவரும் பொறியியல் பட்டதாரிகள்!

சென்னை: சிறுவன் கீர்த்திவாசனைக் கடத்திப் பிடிபட்டுள்ள இரு இளைஞர்களும் பொறியியல் படிப்பு படித்தவர்கள். இவர்களில் ஒருவர் இங்கிலாந்தில் எம்.பி.ஏவும் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்திவாசன் கடத்தல் சம்பவத்தில் இரு இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் பிரபு. இவருக்கு வயது 29. பெரம்பலூரில் டிஎம்இ முடித்த இவர் பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பார் டைம் பிஇ படிப்பு படித்தவர். முதலில் சிங்கப்பூரில் வேலை பார்த்தார்.

மற்றொருவரான விஜய். இவருக்கு வயது 26. இவர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பிடெக் படித்தவர். இங்கிலாந்தில் எம்.பி.ஏ முடித்தார். கடந்த ஆண்டுதான் இவர் தனது படிப்பை முடித்தார். இவருக்கு ஒரு காதலி உண்டு. இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

இருவரும் ரமேஷுக்கு நேரடியான சொந்தம் இல்லை. ரமேஷ் சார்ந்த துறையூர்தான் இவர்களுக்கும் சொந்த ஊர். இவர்களது உறவினர் ரமேஷிடம் மேனேஜராகப் பணியாற்றுகிறார். ரமேஷும், இவர்களும் ஒரே ஜாதி. எனவ அந்த வகையில், உறவினர்கள் போல வருகிறார்கள்.

தொழில்படிப்பு படித்த இருவரும் இப்படி கிரிமினல்கள் போல மாறி கடத்தல் மற்றும் பணம் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு போலீஸாரை மிகவும் குழப்பி விட்டனர். நிறைய பேர் சேர்ந்து செய்ததுபோல காட்சியை உருவாக்கி போலீஸாரை குழப்பியுள்ளனர்.

மேலும் பல்வேறு கார்களையும் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் தங்களது சொந்தை பைக்கை பயன்படுத்தியதால்தான் தற்போது சிக்கிக் கொண்டனர்.

பணம் வாங்க வரும்போது காரில் போனால் மாட்டிக் கொள்வோம் என்பதால் மோட்டார் சைக்கிளில் போய் பணத்தை வாங்கிக் கொண்டு மறைந்துள்ளனர். இதனால்தான் அந்த இடத்தில் வைத்து இவர்களைப் போலீஸாரால் பிடிக்க முடியாமல் போய் விட்டது.

நல்ல படிப்பு படித்து, வெளிநாட்டுக்கெல்லாம் போய் படித்து வந்த இந்த இரு இளைஞர்களும் இப்போது புழல் சிறையில் கம்பி எண்ணப் போவது குறிப்பிடத்தக்கது.

Comments