"விட்டுக் கொடுக்க மாட்டோம்' :ஜப்பானுக்கு ரஷ்யா பதில்

மாஸ்கோ :   ஜப்பானின் வடக்கு எல்லையில் உள்ள "குனாஷிர்' தீவுக்கு, ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் பயணம் மேற்கொண்டதால், இருதரப்பு உறவிலும் விரிசல் விழுந்துள்ளது. ஜப்பானின் வடபகுதியில் "குரில்' என்ற நான்கு தீவுகள் உள்ளன. 1945ல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ரஷ்யா இவற்றைக் கைப்பற்றியது. 1956ல் சமாதான நடவடிக்கையின் போது, இரண்டு தீவுகளைத் தர ரஷ்யா முன்வந்தது. ஜப்பான் அதற்கு மறுத்ததால் இன்று வரை இப்பிரச்னை நீடிக்கிறது.இந்நிலையில் "குரில்' தீவுகள் ரஷ்யாவுக்கே சொந்தம் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ், 01ம் தேதி  அங்குள்ள "குனாஷிர்' தீவுக்குச் சென்று பார்வையிட்டார். அத்தீவின் வளர்ச்சிக்கு முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்."ரஷ்ய அதிபரின் தீவுப் பயணம் துரதிர்ஷ்ட வசமானது' என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. சீனாவுடனான "செனகாகு' தீவுப் பிரச்னையில், ஜப்பான் பிரதமர் நவோடா கானின் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான இப்பிரச்னையில் அவர் எடுக்கும் முடிவுதான், அவரது கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என, அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Comments