அமெரிக்க தேர்தல்-குடியரசுக் கட்சிக்கு மெஜாரிட்டி-ஒபாமாவுக்கு சரிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த தேர்தலில், பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது. இதனால் அதிபர் ஒபாமாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிபர் பதவிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஒபாமாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவாக இது காணப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 435 சீட்களுக்கும் தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன்பு ஜனநாயகக் கட்சிக்கு 255 இடங்களும், குடியரசுக் கட்சிக்கு 178 இடங்களும் இருந்தன. 2 இடங்கள் காலியாக இருந்தன.

தற்போது தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஜனநாயகக் கட்சியிடமிருந்து 53 இடங்களை குடியரசுக் கட்சி பறித்துள்ளது. மேலும் மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்களை விட கூடுதலாக 40 இடங்களை வெல்லும் நிலையில் அது உள்ளது.

இது போக 13 மாவட்டங்களில் அது முன்னணியில் உள்ளது. ஜனநாயகக் கட்சியால் குடியரசுக் கட்சியிடமிருந்து 2 இடங்களை மட்டுமே பறிக்க முடிந்தது.

பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால் ஒபாமா அரசால் இயல்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒபாமாவின் பல்வேறு திட்டங்கள், கொள்கைகளை நினைத்தபோது நிறைவேற்ற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒபாமாவின் சுகாதாரத் துறை மறுசீரமைப்பு சட்டமும் கேள்விக்குறியாகியுள்ளது.

பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும் வெற்றி பெற்றிருப்பதைத் தொடர்ந்து சபாநாயகர் பதவிக்கு குடியரசுக் கட்சித் தலைவர் ஜான் போனர் தேர்வு செய்யப்படுவார் எனத்தெரிகிறது. இவர் அடுத்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சிசார்பில் போட்டியிடுவார் என ஏற்கனவே பேச்சு உள்ளது நினைவிருக்கலாம்.

வெற்றி குறித்து போனர் கூறுகையில், மக்களின் கருத்துக்களை கேட்க மறுத்தவர்களுக்கு இது மக்கள் கொடுத்துள்ள பரிசு. நாடு முழுவதும் ஒரே குரலில் மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார்.

Comments