பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சி கிடையாது : நிதிஷ் வெற்றி ரகசியம்

பாட்னா : பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக சுஷில்குமார் மோடியும் நேற்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டனர். சட்டசபையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி ஏதும் இல்லாத அளவுக்கு வெற்றியைக் குவித்து எல்லார் மனதிலும் நிற்கிறார் நிதிஷ்.

பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் - ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கூட்டணி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, நேற்று பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்தது. பீகாரின் 32வது முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து, பா.ஜ.,வின் சுஷில்குமார் மோடி, துணை முதல்வராக பதவியேற்றார். கவர்னர் டி.என்.கொன்வார், இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.,க்களும், பா.ஜ.,வைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில், பா.ஜ., தலைவர்கள் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ் மற்றும் சத்ருகன் சின்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சி இல்லை: பீகாரில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜ., கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சட்டசபையில் மொத்தம் உள்ள உறுப்பினர்களின் 10 சதவீதம் பேராவது இருந்தால் தான், எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். பீகாரை பொறுத்தவரை, எதிர்க்கட்சி அந்தஸ்து பெற வேண்டுமெனில், அந்த கட்சிக்கு குறைந்தது 24 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. ஆனால், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 22 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். எனவே, தற்போது சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்து கோருவதற்கான தகுதி, எந்த கட்சிக்கும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Comments