தேனி : பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுடன் செல்வோருக்கும் கட்டண சலுகை அளிக்கப்பட உள்ளது. துணையாளர் உதவியின்றி பயணம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் பயணம் செய்யும் ஒருவருக்கு நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் செய்ய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள 75 சதவீத கட்டண சலுகையை உள்ளூர் பஸ், குளிர்சாதன பஸ்களை தவிர மற்ற அனைத்து அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகள் தன் துணையாருடன் ரயில் கட்டண சலுகை போல 25 சதவீத கட்டணத்தை செலுத்தி இருவரும் பயணம் செய்யலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, துணையாளர் உதவியின்றி பயணம் செய்ய முடியாது என்பதற்கான மருத்துவ சான்று ஆகியவற்றின் அசலை கண்டக்டரிடம் காட்ட வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் பெற்றால் போதுமானது. இந்த மருத்துவ சான்று மூன்று ஆண்டுகள் செல்லத்தக்கது. மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கான படிவத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments