சோனியா மீது ஜெகன் மோகன் ரெட்டி நேரடி தாக்கு

ஐதராபாத் : ஆந்திர மாநிலத்தில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான, "டிவி' சேனலில், முதன்முறையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, கடந்தாண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அம்மாநில நிதி அமைச்சராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரோசய்யா முதல்வராக்கப்பட்டார். இதனால், அதிருப்தியடைந்த ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தையின் மறைவின்போது, தீக்குளித்து உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களை சந்திப்பதற்காக, கட்சி தலைமையை மீறி, "ஆறுதல் யாத்திரை' நடத்தினார். மேலும், ஜெகன்மோகனுக்குச் சொந்தமான "டிவி' சேனல்களும், செய்தித் தாள்களும், முதல்வர் ரோசய்யாவையும், அவரது அரசையும் வெளிப்படையாகவும், கடுமையாகவும் விமர்சித்தும், எதிர்த்தும் வந்தன. ஆனால், காங்கிரஸ் தலைமையைப் பற்றியோ, சோனியா பற்றியோ வாய்திறக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஜெகன்மோகனுக்குச் சொந்தமான செய்தி சேனலில், ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், முதன்முறையாக, காங்கிரஸ் தலைமை பற்றியும், சோனியா பற்றியும் வெளிப்படையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், சோனியாவின் தலைமையால், காங்கிரஸ் கட்சி நாட்டில் பலமிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியா இந்நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்ல. ஆனால், அரசை அவர்தான் இயக்கி வருகிறார். மன்மோகன் சிங் ரப்பர் ஸ்டாம்பை போல் தான் இருந்து வருகிறார். அவரால், தன்னிச்சையான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் உட்பட பல்வேறு முறைகேடுகளால் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசின் கழுத்துக்கு சுருக்கு கயிறு வந்தது. சோனியா சிறந்த பேச்சாற்றல் உள்ளவர் அல்ல. அப்போது, வாய்க்கு வந்ததை பேசுவார். இதனால், அவருக்கு மக்கள் செல்வாக்கு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டியின், "டிவி"யில், இவ்வாறு வெளிப்படையாக, காங்கிரஸ் தலைமை விமர்சிக்கப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  "அரசியலில், ஜெகன் அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்து விட்டார். அனேகமாக அவர், காங்கிரசில் இருந்து வெளியேறலாம். எனவே தான், வெளிப்படையாக காங்கிரசை எதிர்க்கத் துணிந்து விட்டார்' என, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Comments