இன்று பக்ரீத் திருநாள்

முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் உன்னதமானது "ஹஜ்' எனும் இறுதிப் பயணம். உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்கள் அரேபிய மண்ணில் கூடி, அல்லாஹ்வை வணங்கி இறுதிக் கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். இதையொட்டி உலகம் முழுவதும் ஹஜ் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை நாம் "பக்ரீத்' என்னும் "தியாகத்திருநாள்' என்கிறோம்.

பக்ரி+ ஈத்= பக்ரீத் என்று இதனைப் பிரித்து பொருள் கொள்ளலாம். "பக்ரி' என்றால் "ஆடு'. இந்தியாவில் பெரும்பாலும் ஆட்டை குர்பானி செய்வதாலேயே இந்தப் பெயர் இங்கே நின்று நிலவுகிறது. இத்திருநாளுக்குப் பின்னே ஒரு தியாக வரலாறு இருக்கிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அரபு நாட்டில் நடந்த சம்பவம் இது. ஹஜ்ரத் இப்ராஹிம்(அலை) அவர்களின் குடும்பத்தினர் செய்த தியாகங்கள் மார்க்கச் செயல்களாக விதிக்கப்பட்டு இத்திருநாளிலே நினைவூட்டப்படுகின்றன.

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள், தனது மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அல்லாஹ்வின் ஆணைக்கு இணங்க பலியிட எத்தனித்த நிகழ்வை தியாகத்திருநாளாக நினைவுபடுத்தி ஆடு,மாடு, ஒட்டகம் இவைகளை அறுத்து "குர்பானி' தரப்படுகிறது. இந்த குர்பானி கொடுக்க தகுதி என்னவென்றால், வசதி படைத்தவர்கள் அதாவது எல்லா செலவுகளும் போகையில் ரூ.5 ஆயிரம் ரொக்கம் இருந்தாலே அவர்களுக்கு இது அவசியம் என்கிறது ஷரிஅத்.உற்றார், உறவினர், ஏழைகளை இந்நாளிலே மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த குர்பானி கொடுக்கும் நிகழ்வு அமைந்திருக்கிறது. குர்பானி கொடுக்கும் பிராணியின் இறைச்சியை மூன்று பங்குகளாக்க வேண்டும். ஒன்றை தனக்கும், இரண்டாவது பங்கை தனது உறவினர்களுக்கும், மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும். குர்பானி கொடுப்பதால் அல்லாஹ்விடம் அந்த பிராணியின் இறைச்சியோ, ரத்தமோ வந்தடைவதில்லை. குர்பானி செய்பவர் அல்லாஹ்வின் மீது கொண்ட "உள்ளச்சம்' எனும் "பயபக்தி' தான் அல்லாஹ்வைச் சென்றடைகிறது.

இதை அல்லாஹ்வே திருக்குர்ஆனில் கூறியிருக்கிறான். குர்பானி கொடுக்கும் பிராணிகளின் தகுதிகள் என்று எடுத்துக் கொண்டால் நன்கு கொழுத்ததாக இருக்கவேண்டும். நோய், காது முழுவதும் அல்லது சிலபகுதி வெட்டப்பட்டிருப்பது போன்ற குறைகள் இருக்கக்கூடாது. குர்பானி கொடுப்பவர்கள் துல்ஹஜ் பிறை 1லிருந்து குர்பானி கொடுக்கும் வரை தன் உடலிலிருந்து உரோமங்களைக் களைவதும், நகம் வெட்டுவதும் கூடாது. குர்பானி கொடுப்பவரே அறுப்பது நல்லது. இயலாதவர்கள் வேறு ஒருவரை நியமித்து "நிய்யத்' (உறுதிமொழி) செய்து கொள்வதில் தவறில்லை.அரபி தெரியாதவர்கள் பிராணியை அறுத்தால்.... "ஆண்டவனே! இந்த குர்பானியை இன்னாருக்காக ஏற்றுக் கொள்வாயாக. உனது கலீல் இப்ராஹிம்(அலை), கபீப் முகம்மது (ஸல்) இருவரிலிருந்து ஏற்றுக் கொண்டது போல' என்று கூற வேண்டும்.

குர்பானியின் தோலையோ, கறியையோ கூலியாக ஒருபோதும் கொடுக்கக் கூடாது. குர்பானியின் தோலை விற்றால் அதை "சதக்கா'(தர்மம்) செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவரது குர்பானியையும் ஏற்றுக் கொள்வானாக.ஆமீன்!

இப்ராஹிம் நபியின் தியாகங்கள் : உலக மக்கள் சீர்திருத்தும் முயற்சிகளை மேற்கொண்டு, வெற்றி பெற்ற சீர்திருத்தவாதிகளான நபிமார்கள் வரிசையில், இப்ராஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு முக்கிய அங்கம் வகிக்கிறது. இதற்கு முன் வாழ்ந்த நூஹ் நபி, ஹுது நபி, சாலிஹ் நபி ஆகிய நபிமார்கள் வரிசையில், இவரும் வருகிறார்.இவர் சிலை வணக்க சடங்கு, சம்பிரதாயங்களை கடைபிடித்து வந்த மத குருமார்கள் குடும்பத்தில், ஈராக் நாட்டிலுள்ள "ஊர்' என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் ஆஜர். அவர், அந்நாட்டு அரசவையின் மத குருவாகவும் இருந்து வந்தார்.

குடும்பம்: இப்ராஹிம் நபி வாழ்ந்த காலம், ஏறத்தாழ கி.மு., 3,600 ஆண்டுகளாகும் என கணிக்கப்படுகிறது. இப்ராஹிம் நபிக்கு, சாரா மற்றும் ஹாஜிரா என, இரண்டு மனைவியர் இருந்தனர். அவருக்கு நீண்ட காலம் வரையில் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவருடைய வயது 85க்கும் மேலாக இருந்த போது, ஹாஜிரா மூலமாக ஒரு குழந்தை பிறந்தது.அவருடைய பெயர் இஸ்மாயில். அதற்கு பின் சில ஆண்டுகள் கழித்து, சாரா மூலமாக இரண்டாவது குழந்தை பெற்றார். அவருடைய பெயர் இஸ்ஹாக். இஸ்ஹாக் நபியின் சந்ததி பல்கி பெருகி, காலப்போக்கில் பனி இஸ்ராயில் என்ற சமுதாயம் உருவானது.அச்சமுதாயத்தில் பல நபிமார்கள் பிறந்தனர். இறுதியாக அச்சமுதாயத்தில் ஈசா நபி (Jesus Christ) பிறந்தார். மூத்த மகன் இஸ்மாயிலின் சந்ததியில், அவ்வாறு நபிமார்கள் வரவில்லை. இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும் கி.பி., 560ல் பிறந்தார்.


நாட்டு நிலைமை: இப்ராஹிம் நபி காலத்தின் சிலை வணக்க வழிபாடுகளும், சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் வழிபாடுகளும் நடைபெற்று வந்தன. இப்ராஹிம் நபிக்கு சிறு வயதிலிருந்தே இவற்றில் ஈடுபாடு இருந்ததில்லை. இது விஷயமாக அவற்றின் உண்மை நிலைமை தெரிந்துக் கொள்ள, அவர் தம் தந்தையிடம் பலமுறை கேள்விகளையும், விளக்கங்களையும் கேட்டு வந்தார்.அவருடைய தந்தையின் பதில்கள், அவருக்கு திருப்திகரமாக இல்லாததால், அவருடைய தந்தையிடம் பலமுறை வாக்குவாதத்தில் இறங்கினார். இப்படியாக அவர் வாலிப வயதை அடைந்த போது, தம் தந்தையின் வழிமுறைகளை எதிர்க்கவே செய்தார். (அல்குர் ஆன்-6:74) இதனால் அவர் தம் தந்தையின் பகைமையை வளர்த்து கொண்டார்.

அரசனுடன் மோதல்: இவரை பற்றி கேள்விபட்ட அந்நாட்டு அரசன், அவரை அழைத்து விசாரித்தான். அவரிடமும் தான் இறைவனிடமிருந்து பெற்றுள்ள ஒரிறை கொள்கை கோட்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார். இறைவனின் வழிகாட்டுதலின்  அடிப்படையில் அரசும், நாட்டு மக்களும் செயல்பட்டால், அந்த நாடு எந்த அளவிற்கு சுவர்க்க பூமியாக மாறிவிடும் என்பதை விளக்க சொன்னார். அதன் அடிப்படையில் ஒரு சமுதாயத்தின் வாழ்வும், மரணமும் ஏற்பட்டு வருகிறது என்பதையும், அவர் அரசனுக்கு விளக்கினார். ஆனால், இவருடைய அறிவுரைகளை அரசன் ஏற்கவில்லை. (அல்குர் ஆன் - 2:258) எனவே, அவர் அந்த அரசனின் பகைக்கும் ஆளானார்.

மக்களிடம் போதனைகள்: மேலும், அவர் மக்களிடமும் ஓரிறைக் கொள்கைகளைப் பற்றி போதித்து வந்தார். இறைவனின் வழிகாட்டுதலை பின்பற்றி வருவதால் ஏற்படுகிற பலன்களைப் பற்றியும், அதற்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் பேரழிவுகளைப் பற்றியும், மக்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்தார்.இரவில் மின்னும் நட்சத்திரத்தை கடவுளாக வழிபடுபவர்களிடம், "இவற்றை நான் இறைவனாக எடுத்துக் கொண்டால், இவை இரவில் தோன்றி பகலில் மறைந்து விடுகிறதே. இவற்றை நான் எவ்வாறு இறைவனாக ஏற்றுக் கொள்வது?' என கேட்டார். (அல்குர் ஆன் - 6:76). சந்திரனை கடவுளாக வழிபட்டு வரும் மக்களை பார்த்து, "இதை நான் இறைவனாக ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அதுவும் இரவில் ஒளியை தந்து, பகலில் மறையக் கூடியதாக இருக்கிறதே. எனக்கு இறைவன் நேர்வழி காட்டவில்லை என்றால், நானும் வழி தவறிச் செல்பவரில் ஒருவனாக இருந்திருப்பேன்' என்றார். (அல்குர் ஆன் - 6:77) அதன்பின் மிகப் பிரகாசமாக சுடர்விட்டு ஒளி வீசும் பிரமாண்டமான சூரியன் கடவுளாக வழிபடும் மக்களை பார்த்து, "இதை நான் இறைவனாக ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அது பகலில் தோன்றி இரவில் மறைந்து விடுகிறதே. இவ்வாறு பகலில் தோன்றி இரவில் மறைபவற்றையா நான் இறைவனாக ஏற்றுக் கொள்ள முடியும்?"இறைவனின் படைப்புகளை இறைவனாக கருதுவதை விட்டு, விலகி நிற்கிறேன். இவற்றை எல்லாம் படைத்தது அல்லாஹ் தான். இவ்வாறு படைத்து பரிபாலிக்கிற அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டுமே அடிபணிந்து வாழ விரும்புகிறேன். அதனால் ஏற்படும் பலன்களை நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்' என்று நம் சமுதாயத்தவர்க்கு பலமுறை போதித்து வந்தார். (அல்குர் ஆன் - 6:78, 79)

மக்களின் தீக்கனல்: ஆனால், அந்த மக்களில் பெரும்பாலோர், இவருடைய போதனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் தம் போதனைகளை மென்மேலும் தீவிரமாக்கவே அவர்களும் இவருக்கெதிராக விவாதிக்க ஆரம்பித்தனர். (அல்குர்ஆன் - 6:80) இப்படியாக அவருக்கு தம் மக்களிடமும் பகைமை வளர்ந்தது. அச்சமுதாயத்தினரை புரிய வைத்து, அவர் ஒரு உபாயத்தை கையாண்டு சிலைகளுக்கு ஏதிராக கடுமையான நடவடிக்கை எடுத்ததால், (அல்குர்ஆன் - 21:57, 67) அம்மக்கள் அவருக்கு ஏதிராக கோபத்தால் கொதித்து போயினர். அவருடைய செயல்கள் நாலாப்புறமும் தீப்பொறியாக பரவிடவே, அருக்கெதிரான கோபக்கனலும் அதிகமானது."நீங்கள் இவரை ஏதாவது செய்ய நாடினால், இவரை நெருப்புக் குண்டத்தில் எரியுங்கள். உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்' என   ஆவேசமாக பேச ஆரம்பித்தனர். (அல்குர்ஆன் - 19:68) எனவே, அங்கிருந்தால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என எண்ணி, அவர் தன் நாட்டை விட்டு வெளியேறி பாலஸ்தீன நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்து சென்றுவிட்டார். (அல்குர்ஆன் - 37:99)எனவே மக்களிடம் இருந்த கொந்தளிப்பு நெருப்பும், ஆவேச தீயும் தணிய ஆரம்பித்தது. இப்படியாக இப்ராஹிம் நபிக்கு பாதுகாப்பும், நிம்மதியும் கிடைத்தது. (அல்குர்ஆன் - 21:69)

மில்லத்: இவ்வாறே இப்ராஹிம் நபி அவர்களும், அல்லும், பகலும் அயராது பாடுபட்டு மக்களை நல்வழிப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அதன்பின், "மில்லத்' என்ற பொதுமக்கள் தொண்டு இயக்கத்தை வெற்றிகரமாக நிலை நாட்டினார். அதன் முக்கிய நோக்கம், அனைத்து தரப்பு மக்களும் எல்லா வளத்தையும் பெற்று சீரும், சிறப்புமாக பாதுகாப்போடு வாழ வேண்டும் என்பதே. அவ்வாறாக அத்தொண்டு இயக்கம் ஆட்சியமைப்பாக மாறி, "மில்லதெ இப்ராஹிம்' என பெயர் பெற்றது.அதன் செயல்பாடாக அவர், படை வீரர்களையும், குதிரைப் படைகளையும் தயாரித்தார். தன் நாட்டில் மட்டுமின்றி, அண்டை நாட்டவர்களுக்கும் சமூக விரோத சக்திகளால் ஏற்பட்டு வந்த அநியாய அக்கிரமங்களை தம் படைகளை அனுப்பி ஒழித்துக் கட்டினார்.இப்படியாக அந்த பிரதேசம் முழுவதும் சாந்தியும், சமுதானமும் கொண்ட பாதுகாப்பான வளம்மிக்க அமைதிப் பூங்காவாக விளங்கியது. அவர் ஏற்படுத்திய இதே மில்லத்தை, மக்காவிலும் ஏற்படுத்தும் படி இறைவன் முகம்மது நபிகளுக்கும் (ஸல்) அறிவுறுத்துகிறான். (அல்குர்ஆன்) அவரில் அழகிய முன் மாதிரி இருப்பதாகவும் அல்லாஹ்வே சிலாகித்து கூறுகிறான் (அல்குர்ஆன் - 60:4)

தியாகச் சுடர்: இப்படியாக இப்ராஹிம் நபி, உலக மக்களின் பாதுகாப்பான வாழ்விற்காக தன் வாழ்வின் எல்லா சுகங்களையும் அர்ப்பணித்ததோடு, அதற்காக அல்லும், பகலும் அயராது பாடுபட்டு, உலக வரலாற்றில் தியாகச் சுடர் என்ற நீங்கா இடத்தை பிடித்துக் கொண்டார். இப்படிப்பட்ட மாவீரரை அல்லாஹ் உலக மக்களின் "இமாம்' தலைவராக ஆக்கியிருப்பதாக, திருக்குர் ஆனில் அவரை புகழாரம் செய்கிறான். (அல்குர்ஆன் - 2:124)இவர் செய்த பல தியாகங்கள் எண்ணில் அடங்காது. அவற்றில் முக்கியமானது, தம் தந்தைக்கு பின் அவருக்கு, ராஜகுரு என்ற பதவி அரசவையில் கிடைக்கவிருந்தது. அப்படிப்பட்ட சொகுசு வாழ்வை, ஒரு உயர் லட்சியத்திற்காக துறந்தார். அது மட்டுமின்றி, தான் பிறந்து வளர்ந்த ஊரையும், தம் குடும்பத்தாரையும் உற்றார், உறவினரையும் தியாகம் செய்துவிட்டார். வயதான காலத்தில் பிறந்து, செல்லமாக வளர்ந்து வந்த தம் மகனை, ஒரு மாபெரும் லட்சியத்திற்காக புற்பூண்டு கூட விளையாத பள்ளத்தாக்கில் குடியமர்த்தினார். இதுவும் மாபெரும் தியாகம். அது மட்டுமின்றி, அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி உலக சாந்தியும், சமாதானத்திற்காவும் இவர் வாழ்க்கையையே அர்ப்பணித்தார் என்று சொன்னால் மிகையாகாது.

நடை பிணங்கள்: அவர் தன் நாட்டை விட்டு வெளியேறி, பாலஸ்தீன நாட்டிற்கு சென்று அங்கு, "மில்லத்' என்ற மக்கள் தொண்டு இயக்கத்தை அமைக்க உறுதி பூண்டிருந்தார். ஆனால், அங்குள்ள மக்களும் நடை பிணங்களாக வாழ்ந்து வருவதை கண்டு, இவர்களை உயிரோட்டமுள்ள சமுதாயமாக மாற்றுவது எப்படி என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தார். அதை தெரிந்து கொள்ள முடியாததால், "நடை பிணங்களாக வாழும் இம்மக்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய்?' என இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், "என் வழிகாட்டுதலில் உனக்கு நம்பிக்கை இல்லையா?' என்று பதில் கேள்வி கேட்டான். அதற்கு அவர், திருப்பதிகரமான வழிமுறையை அறிந்து கொள்ளவே தன் மனம் நாடுவதாக கூறினார்.அதற்கு இறைவன், "நான்கு பறவைகளை பிடித்து அவற்றை நன்றாக பழக்கி கொள். அவை நன்றாக பழகின பின், அவற்றின் ஒவ்வொன்றையும் வெகுதூரத்திலுள்ள மலை உச்சி மீது தனியே வைத்து விட்டு, அவற்றை அழைத்தால் அவை உம்மிடம் உடனே ஓடோடி வந்துவிடும்' என்றான்.

மக்களை திருத்துவது: அதாவது ஐந்தறிவு பெற்ற பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்களே, நன்றாக பழகின பின், அவை, உன் ஓர் அசைவிற்கு இணங்கி வந்து விடும் போது, ஆறறிவு பெற்ற மனிதன் அவ்வாறு இணங்கி வர மாட்டானா என்பதே, இறைவன் அளித்த பதிலின் சூட்சமம்.பறவைகளை நீங்கள் பிடிக்க முயலும் போது, அவை உம்மை கண்டு மிரண்டு ஓடும். அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உணவளித்து பழக்கி வந்தால், அவைகளில் உள்ள பயம் நீங்கி, அதன்பின் அவை உங்களோடு ஐக்கியமாகி விடும். இதற்காக பொறுமையும், விடா முயற்சியும் அவசியமாகிறது.அதுபோலவே, மக்கள் மத்தியில் ஒரு புதிய சித்தாந்தத்தை வைக்கும் போது, அதை கேட்கும் மக்களுக்கு ஆரம்பத்தில் பயமும், தயக்கமும் ஏற்படும். ஆனால், அந்த வழிகாட்டுதல்கள் அவர்களுடைய நன்மைக்கே என்ற விஷயத்தை அவர்களுக்கு புரிய வைக்கும் வரையில், நீங்கள் சிரமப்பட வேண்டி வரும்.பல எதிர்ப்புகளையும், துயரங்களையும் எதிர் கொள்ள வேண்டி வரும். அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், பறவைகள் எவ்வாறு தம் குஞ்சுகளை அரவணைத்து கொள்கிறதோ, அவ்வாறே நீங்களும் அன்பு எனும் இறக்கையை விரித்து, மக்களை அரவணைத்து அவர்களை நேர்வழியில் கொண்டு வர முயல வேண்டும்.

என்.ரூஹூல்லா

குர்பானியின் மகத்துவம் : இஸ்லாம் இரண்டு பெருநாட்களை இந்த உலகிற்கு அளித்தது. ஒன்று: ரமலான் பண்டிகை. இன்னொன்று: தியாகத் திருநாளான பக்ரீத். இஸ்லாமிய சரித்திரம் ஆண்டு துவக்கமான முஹர்ரம் மாதமும், கடைசி மாதம் துல்-ஹஜ் இரண்டும், மாபெரும் தியாகங்களை உள்ளடக்கிய மாதங்கள். கருணையே உருவான அல்லாஹ், ஒருமுறை நபி இப்ராஹிம் (அலை) கனவில் தோன்றி, "உம்முடைய மகன் இஸ்மாயிலை என் பெயரால் அறுத்து பலி இடு' என்று சொன்ன போது, தன்னை படைத்தவனின் கட்டளையை நிறைவேற்ற முடிவு செய்தார். ஏனென்றால், இறைத்தூதர்களுக்கு கனவுகள் என்றால், கடவுளின் கடிதங்கள் என்று தான் அர்த்தம்.

தன் கனவை பற்றி, தன் அன்பு மகன் நபி இஸ்மாயிலிடம் (அலை) கூற, "உங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ அதை நிறைவேற்றுங்கள். நான் நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன்' என்று அவர் பதில் அளித்தார்.பிறகு, இப்ராஹிம் (அலை) தன் மகன் இஸ்மாயிலை அழைத்து கொண்டு, மினா எனும் மலையடிவாரத்திற்கு சென்றார். பிள்ளைப் பாசம் தடுக்காமலிருக்க, தன் கண்களை துணியால் கட்டி, மகனுடைய கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, "அல்லாஹ் மிகப் பெரியவன்' என கூறியதும், மகனிருந்த இடத்தில் ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியையும் கண்டார்."எல்லாப் புகழும் இறைவனுக்கே, அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன் அவனே, அவனை தவிர, வணக்கத்துக்குரியவர் வேறில்லை. நீயே என் அதிபதி' என, தன்னை சோதித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.இதன் நினைவாக எங்கள் நபிகள் முஹம்மத் (ஸல்) "இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள் ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை ஏழை எளியவர்களுக்கும் கொடுத்து கொண்டாடுங்கள்' என்றார்."நீங்கள் அறுத்த ஆட்டின் ரத்தமோ, இறைச்சியோ என்னை அடைவதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்களின் எண்ணங்களை நான் நன்கு அறிந்தவனாக உள்ளேன்' என அளவற்ற அருளாளன் கூறுகிறான்.

குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு. குர்பானி கொடுக்கும் நாளில் குர்பானி கொடுப்பதை விட, அல்லாஹ் இடத்தில் வேறு சிறந்த வணக்கம் எதுவும் கிடையாது. குர்பானிக்காக பிராணியை அறுக்கும் போது, அதன் ரத்தம் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னாலேயே அல்லாஹ் இடத்தில் அது ஒப்புக் கொள்ளப்பட்டதாகி விடுகிறது.எனவே, "மனம் திறந்து குர்பானி கொடுங்கள்' என, நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார். ஒரு தடவை நாயகத்திடம் தோழர்கள், "குர்பானி என்றால் என்ன?' என்று வினவியதற்கு, "அது உங்களின் தந்தையாகிய நபி இப்ராஹிம் (அலை) உடைய வழிமுறை' என, நாயகம் (ஸல்) பதிலளித்தார். அதற்கு அந்த தோழர்கள், "அதனால் நமக்கு என்ன நன்மை இருக்கிறது?' என கேட்டனர்.

"குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின் ஒவ்வொரு ரோமத்திற்கும் நன்மை இருக்கிறது' என, நாயகம் (ஸல்) பதில் அளித்தார்.குர்பானி, குறிப்பாக மூன்று நாட்களில் மட்டுமே கொடுக்க வேண்டும். அவை துல்ஹஜ் மாதத்தின் 10, 11 மற்றும் 12 தேதிகளில் எப்பொழுது நாடுகிறோமோ அப்பொழுது கொடுக்கலாம். ஆனால், துல்ஹஜ் மாதத்தின் 10வது நாளில், குர்பானி கொடுப்பது மிகச் சிறந்தது.குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின் கறியை, மூன்று பங்காக பிரிக்க வேண்டும். ஒரு பங்கை தன் குடும்பத்திற்காக வைத்து கொள்ள வேண்டும். இன்னொரு பங்கை நண்பர்கள், உறவினர்களுக்கு பங்கிட்டு தர வேண்டும். மூன்றாவது பங்கை ஏழை எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு தர வேண்டும்.இத்தியாக திருநாளில் எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம். இவ்வுலகை படைத்து பராமரிப்பவனே, அளவற்ற அருள் பொழிபவனே, நிகரற்ற அன்புடையவனே, தீர்ப்பு நாளின் அதிபதியே, உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக...

அன்பு, பாசம், பரிவு, சகோதரத்துவம் ஓங்க செய்து, நம் நாட்டில் சுபிட்சம், அமைதி, சமாதானம், மனிதநேயம், மதநல்லிணக்கம் ஏற்படுத்துவாயாக... ஆமின்.நோய் நொடியற்ற வாழ்வு, இல்லாமை, கல்லாமை இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, எல்லாருக்கும் இந்த நல்ல நாளில் மட்டுமின்றி, இனிவரும் நாட்களிலும் சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம். வல்ல நாயகனே... ஆமின்.உலகம் எங்கும் அமைதியும், அன்பும் பரவட்டும்... ஆமின். நன்றியும், கருணையும், நட்பும் சுரக்கட்டும்.... ஆமின். நிறம், மொழி, மதம், ஜாதி, இனம், தேசவெறி கொண்டு மனிதன், தன் சக மனிதனை துவேஷத்துடன் பார்க்கும் நிலை அகலட்டும்... ஆமின்.

எம்.எ.தன்வீர் உல் ஹக்,  சென்னை.

Comments