பிரணாப் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கண்டிப்பு : காங்., முயற்சி தோல்வி

ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்களை முன்வைத்து,  பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை  தேவை எனக் கூறி, பார்லிமென்டின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் கடந்த நான்கு நாட்களாக  முடக்கியுள்ளன. பார்லிமென்ட் பணிகளை மீண்டும் துவக்க, அரசு நடத்திய ஆலோசனை முயற்சி நேற்று தோல்வி அடைந்தது. பிரணாப் முகர்ஜி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில்  பார்லிமென்ட் கூட்டுக்குழு   விசாரணை தேவை  என்பதை எதிர்க்கட்சிகள்  கண்டிப்பாக வலியுறுத்தின.

" 2 ஜி ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீடு, மிகவும் பிரமாண்டமான ஊழல்  என்ற கருத்தை,   அரசு நேற்று வெளியிட்ட  தலைமைக் கணக்குத் துறைத் தலைவர்  அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.  எதிர்க்கட்சிகளுடன்  சுமுகமாகப் பேசி,  சபை நடவடிக்கைகள் தொடர  லோக்சபா முன்னவர் பிராணப் முகர்ஜி, பார்லிமென்ட் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை நேற்று மதியம், மதிய  விருந்துடன்  கூட்டினார். இக் கூட்டத்தில், அரசு சார்பில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி(பா.ஜ.,), சீதாராம் யெச்சூரி, வாசுதேவ் ஆச்சாரியா(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), குருதாஸ் தாஸ் குப்தா, டி.ராஜா(இந்திய கம்யூனிஸ்ட்), அஜித் சிங்(லோக்தள்), நாகேஸ்வரராவ்(தெலுங்கு தேசம்), ஆனந்த் கீத்தே(சிவசேனா), தேவகவுடா(ஜனதா தளம்), திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன்(தி.மு.க.,), தம்பிதுரை, மைத்ரேயன்(அ.தி.மு.க.,) ஆகியோர் பங்கேற்றனர்.

  ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள்,  "2ஜி' ஸ்பெக்ட்ரம்  அலைவரிசை  ஒதுக்கீடு குறித்து  பார்லிமென்ட்  கூட்டுக்குழு  விசாரணைதான்  உண்மைகளை வெளிப்படுத்தும்  என்று கண்டிப்புடன் வலியுறுத்தினர்.  மத்திய அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு ஊழல் புகார்களை விசாரிக்க பார்லிமென்டில் கூட்டுக் குழு  தான் சரியானது என்றனர்.  அரசு, அந்த கோரிக்கையை ஏற்கவில்லை.  இந்த விஷயம் குறித்து  பிரதமரிடம் ஆலோசனை நடத்திய பின்பே  முடிவு எடுக்க முடியும் என்று பிரணாப் கூறினார்.  ஆகவே முடிவு எதுவும் எடுக்காமல் கூட்டம் கலைந்தது. மேலும்,  ஸ்பெக்ட்ரம்  விவகாரம் மட்டுமின்றி, ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் ஊழல்  போன்றவற்றையும் சேர்த்து  கூட்டுக்குழு விசாரிக்க கருத்து தெரிவிக்கப்பட்டது.

 கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து, அதில் பங்கேற்ற தலைவர்கள், நிருபர்களிடம் கூறியதாவது:"2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில், நடந்த ஊழல் புகார்களை பார்லிமென்டில், பொது கணக்கு குழு விசாரிக்க போகிறது. இது தவிர, ஆதர்ஷ் வீட்டு திட்டம், மகாராஷ்டிர மாநில அரசின் ஆளுகையில் உள்ளது. பார்லிமென்ட் கூட்டு கமிட்டி அதை விசாரிக்க முடியாது. இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எடுத்துக் கூறுவேன், பின் அரசு தன் முடிவை அறிவிக்கும்' என, பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.  முகர்ஜியின் வாதத்தை எதிர்த்துப் பேசிய பா.ஜ., ராஜ்யசபா தலைவர் அருண் ஜெட்லி, "பொதுக் கணக்கு குழு, கணக்குகளில் நடந்த ஊழல்களை குறித்து மட்டுமே கவனிக்க முடியும். அதற்கு மேற்பட்ட ஊழல் பரிமாணங்களை  விசாரிக்க முடியாது.  ராஜா உட்பட சம்பந்தப்பட்டவர்களை  நேரில்  விசாரிக்க அதற்கு அதிகாரம் இல்லை. மேலும், கூட்டுக் குழு விசாரணை நடத்தினால், பொதுமக்கள், இந்த புகார்கள் குறித்து நடக்கின்ற விசாரணையை அன்றாடம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும். "ஆதர்ஷ் வீட்டு நிலம் இந்திய ராணுவத்திற்கு சொந்தமானது.  இதில் நடந்தவற்றை  கூட்டுக் குழு விசாரிக்கலாம்' என, ஜெட்லி தன் வாதத்தை வைத்தார்.

 இடதுசாரி கட்சித் தலைவர்கள், யெச்சூரி, குருதாஸ்தாஸ் குப்தா பேசும் போது, " பார்லிமென்ட் கூட்டுக் குழு வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்' என்றனர். இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க., லோக்சபா தலைவர் தம்பிதுரை ஆதரவு தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசுகையில், "கர்நாடகா, ஆந்திராவில் உள்ள இரும்பு தாது சுரங்கங்களில் நடக்கும் மிகப் பெரிய ஊழல்களையும் இந்த கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.

தி.மு.க., சார்பில் பேசிய திருச்சி சிவா, "பார்லிமென்ட் பணிகள் தடைபடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக, எங்கள் தலைவர் கருணாநிதி, தொலைத்தொடர்புத் தறை அமைச்சர் ராஜாவை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பொறுத்தமட்டில், மத்திய அரசு இதில் என்ன நிலை எடுக்கிறதோ அதற்கு எங்கள் கட்சி பூரண ஆதரவு தரும்' என கூறினார்.

இதன் காரணமாக, பார்லிமென்ட் நடவடிக்கைகளை சுமுகமாக நடத்துவதற்கு, காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இன்று பக்ரீத் காரணமாக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவுக்கு விடுமுறை என்பதால், நாளைக்குள்  அரசு மாற்றுவழி ஏதாவது கண்டறிந்து  இப்பிரச்னைக்கு விடைகாண வேண்டி வரும்.

Comments