தேர்தலில் எதிர்க்கட்சிகளை முடக்கிய மியான்மர் ஆளும் கூட்டணி வெற்றி

யாங்கூன் : மியான்மர் தேர்தலில், 80 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக ஆளும் ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டு கட்சி தெரிவித்துள்ளது.மியான்மர் நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 7ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது.நூற்றுக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவரான ஆங் சாங் சூகியை இத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. எனவே, இவரது கட்சி இத்தேர்தலை புறக்கணித்து விட்டது. மற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்டனர். அனைத்து தொகுதிகளிலும் ஆளும் ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டு கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எதிர்க்கட்சியினருக்கு பிரசாரம் செய்வதற்கும், மனு தாக்கல் செய்வதற்கும் போதிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை. வெளிநாட்டு பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மியான்மரில் மொத்தம் 2 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.  தற்போது நடந்த தேர்தலில், 80 சதவீத ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளதாக ஆளும் ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டு கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் ராணுவ அரசின் சார்பில் முறையான தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மியான்மர் நாட்டின் பிரிவினைவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கரன் மாகாணத்தின் மியாவாடி பகுதியில், நேற்று  கடும் சண்டை நடந்தது. இதில் மூன்று பேர் பலியாயினர். இந்த சண்டையால் பீதியடைந்த அகதிகள் 20 ஆயிரம் பேர், தாய்லாந்து நாட்டுக்கு சென்று விட்டனர்.

Comments