இஸ்லாத்திற்கு எதிராக அமெரிக்கா போரிடவில்லை: ஒபாமா பேச்சு

சியோல் : "இஸ்லாத்திற்கு எதிராக அமெரிக்கா போரிடவில்லை' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்தோனேஷிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, தென்கொரிய தலைநகர் சியோலுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், 20க்கும் மேற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.முன்னதாக, இந்தோனேஷியாவில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, அமெரிக்க அதிபர் என்ற கோணத்தில் மட்டுமின்றி, இந்தோனேஷிய பேச்சு முறைகளில் சாதாரணமாகவும் ஒபாமா பேசினார்.கடந்த 1992ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, அவர் இந்தோனேஷியாவுக்கு வந்தார். சிறுவனாக இருந்தபோது அவர், இங்கு சில ஆண்டுகள் வசித்துள்ளார் என்பதால் இம்மாற்றம் அவர் பேச்சில் தெரிந்தது.இந்தோனேஷிய பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஒபாமா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:இந்தோனேஷியா என்னுடைய வாழ்வின் ஒரு பகுதியுடன் தொடர்புடையது. நான் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்கா ஒரு போதும், இஸ்லாமியர்களுக்கு எதிராக போரிடவில்லை; பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நாங்கள் போரிடுகிறோம். அல்-குவைதா  மற்றும் பயங்கரவாதிகளை அழிப்பதற்கு இஸ்லாமியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான், பயங்கரவாத்தை வேருடன் அழிக்க முடியும்.இவ்வாறு ஒபாமா கூறினார்.

Comments