எந்திரன் திருட்டு கதை! ஷங்கருக்கு போலீஸ் நோட்டீஸ்!!

"எந்திரன் சினிமா கதை விவகாரத்தில் இரண்டு எழுத்தாளர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் கதை திருட்டுக்கதை என சென்னை போலீஸ் கமிஷனரிடம் இரண்டு புகார்கள் தரப்பட்டன. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனது, "ஜூகிபா கதையை திருடி படமாக்கி விட்டதாக புகார் அளித்தார். ஆர்னிகா நாசர் தனது, "ரோபாட் தொழிற்சாலை கதையை திருடி படமாக்கி விட்டதாக புகார் அளித்தார்; இவர்கள் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
புகார்கள் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். புகாரில் கூறப்பட்ட கதை தொடர்பான விசாரணை முதற்கட்டமாக நடந்தது. இயக்குனர் ஷங்கர், "எந்திரன் படத்தின் கதை குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஷங்கர், வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விளக்கம் அளிப்பார் என கூறப்படுகிறது.

Comments