சபரிமலையில் பிளாஸ்டிக் குப்பை போடாதீர்கள்: தமிழக பக்தர்களுக்கு கேரள அமைச்சர் அறிவுரை

சென்னை:""சபரிமலைக்கு வரும் பக்தர்கள், நினைத்த இடத்தில் குப்பையை போடுவதால், பம்பை நதி மாசடைகிறது. வனப்பகுதியில் நடந்து செல்லும் பக்தர்கள் தீ மூட்டிச் செல்வதால், காட்டில் தீ விபத்துகள் ஏற்பட்டு மரங்கள், காட்டு யானைகள் மற்றும் பல்வேறு காட்டு விலங்குகள் அழிகின்றன,'' என, கேரள வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் கூறினார்.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களால், சுற்றுச் சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில், விழிப்புணர்வு பிரசாரத்தை கேரள வனத்துறை அமைச்சகம் துவக்கியுள்ளது.தமிழகத்தில் இருந்து பக்தர்களை அங்கு அழைத்துச் செல்லும் குருசாமிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரத்தை கேரள வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் சென்னை கே.கே.,நகர் அய்யப்பன் கோவிலில் நேற்று துவக்கி வைத்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:வரும் 15ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை மகர விளக்கு திருவிழா சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவங்குகிறது.ஆண்டுதோறும் இந்த நாட்களில் அய்யப்பனை தரிசிப்பதற்காக, ஒரு கோடி பேர் வரை வந்து செல்கின்றனர். வரும் காலங்களில் இது இரண்டு கோடியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு வந்து செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற மறு சூழற்சி செய்ய முடியாத பொருட்களை, பயன்படுத்தி மீதமான உணவுப்பொருட்களை நினைக்கின்ற இடத்தில் போட்டுச் செல்கின்றனர்.

இதனால் சபரிமலை அமைந்துள்ள காட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பம்பை நதி நீரும் மாசடைகிறது. இவ்வாறு ஆண்டுதோறும் 350 டன் பிளாஸ்டிக் கழிவுகளும், 550 டன் காகித மற்றும் துணி கழிவுகளும், 2,000 டன் உணவுப்பொருள் கழிவுகளும் அங்கு தேங்குகின்றன.பக்தர்கள் தீ மூட்டிச் செல்வதால் காட்டில் தீ விபத்துகள் ஏற்பட்டு மரங்கள், காட்டு யானைகள் மற்றும் பல்வேறு காட்டு விலங்குகள் அழிகின்றன. சபரிமலை மற்றும் பம்பை நதி மாசுபடுவதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை கேரள வனத்துறை அமைச்சகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வருகிறது. தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டுகிறோம்.

பக்தர்கள் வசதிக்காக "சபரி ஜலம்' என்ற பெயரில் தண்ணீர் பாட்டில்களை ஒரு லிட்டர் 12 ரூபாய் என்ற விலையில் தயாரித்து கேரள வனத்துறை விற்பனை செய்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்திய பின்னர் அங்குள்ள கடைகளில் பாட்டிலை திரும்ப கொடுத்து ஒரு ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் தாங்கள் பயன்படுத்திய பொருட்களை அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தமுடியும்.இவ்வாறு பினோய் விஸ்வம் கூறினார்.

Comments