காங்கிரசுக்கு ஜெ., ஆதரவு: தலைவர்கள் கருத்து என்ன?

"ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்படி நீக்கும்பட்சத்தில் மத்திய அரசிலிருந்து தி.மு.க., விலகினால், மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அ.தி.மு.க., அளிக்கும்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா சில தினங்களுக்கு முன் அதிரடியாக அறிவித்தது, தமிழகம் மற்றுமின்றி தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

அவரது அதிரடி பேச்சு குறித்து சில தலைவர்களிடம் கருத்து கேட்ட போது அவர்கள் அளித்த பதில்:

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்: ஜெயலலிதா தெளிவாக அவரது கருத்தை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு குற்றச்சாட்டுகள் கூறும்போது உதாசீனப்படுத்துவது கூட்டணிக்கு அழகல்ல. காங்கிரசை பொருத்தவரை, சுதந்திரம் பெற்ற முதல் இன்று வரை காங்கிரஸ் தலைவர்கள் மீதும், காங்கிரஸ் அமைச்சர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டு கூறும்போது கூட ராஜினாமா செய்துள்ளனர். உதாரணத்திற்கு, அரியலூர் ரயில் விபத்துக்கு சம்பந்தம் இல்லாத டில்லியில் இருந்த லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். சமீபத்தில் கூட சசிதரூர், அசோக்சவான், சுரேஷ் கல்மாடி போன்றவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டவுடன் விசாரணை துவங்கும் முன், விசாரணை தீர்ப்பு வெளிவரும் முன் அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். காங்கிரஸ் தயவால் தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் கட்சியின் டில்லி அமைச்சர் கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைமையில் இருக்கிறோம் என்று சொல்லும் அவர்கள் இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து.

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார்: ஜெயலலிதாவை பொருத்தவரையில் காங்கிரஸ் பல நேரங்களில் இப்படிப்பட்ட வார்த்தைகளை நம்பி ஏமாற்றம் அடைந்துள்ளது. கடந்த காலங்களில் அ.தி.மு.க., வுடன் கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறக்க நாங்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு தேவை நம்பகத்தன்மை. அது அ.தி.மு.க., தலைமையைவிட தி.மு.க., தலைமையிடம் அதிகமாகவே உள்ளது. அரசியல் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி 126 ஆண்டுகளை கண்ட பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை குழப்பி விட முடியாது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசு சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட்டுள்ளது என மத்திய அரசு கோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது. அரசியல் ரீதியாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் நட்பு உள்ளது. அதனால் தான் ஜெயலலிதாவின் கருத்தை குமாரசாமி பிரதிபலித்துள்ளார்.

தமிழக தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி: காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஜெயலலிதா அறிவிக்கவில்லை. மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜா பதவி விலகினால் நிபந்தனையற்ற ஆதரவு தருவேன் என்று தான் ஜெயலலிதா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி மிஸ்டர் கிளீன் இல்லை என்பதை அகில இந்திய அளவில் தோல் உரித்துக் காட்டப்பட்டுள்ளது. அமைச்சரவையில் ஒரு அமைச்சர் தவறு செய்தாலும் எல்லாரும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும். லஞ்ச ஊழலுக்கு எதிரான ஆட்சியாக காங்கிரஸ் செயல்படவில்லை என்பதை தோலுரித்து காட்டுவதற்கு ஜெயலலிதாவின் ராஜதந்திர நடவடிக்கையாக இருக்கலாம். ஆடிட்டர் ஜெனரல் குற்றசாட்டிற்கு ஆளான மத்திய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த வரலாறு உண்டு.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., வசந்தகுமார்: காங்கிரசுக்கு தி.மு.க., நம்பிக்கையான கூட்டணி கட்சி. கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் மீறாது. காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில் தவறு செய்தவர்களை கண்டிப்பதற்கு என்றும் தயங்கியது இல்லை. குற்றச்சாட்டுக்கு ஆளானதும் மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவானின் பதவியை ராஜினாமா செய்ய வைத்தோம். சசிதரூர், சுரேஷ் கல்மாடியின் பதவிகளை பறித்தோம். தி.மு.க., காங்கிரஸ் உறவு நன்றாக உள்ளது. எங்கள் உறவை கெடுக்க பலர் முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சி பலிக்காது. மற்ற மாநிலங்களின் எம்.பி.,களின் ஆதரவை பெற்றுத் தருகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார். தனது சட்டைப் பையில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொடுக்க உரிமை உண்டு. அடுத்தவரின் சட்டைப் பையிலிருந்து பணத்தை எப்படி எடுத்துக் கொடுக்க முடியும். அ.தி.மு.க.,விடம் 9 எம்.பி.,க்கள் தான் உள்ளனர். அவர்களால் 18 எம்.பி.,க்களை எப்படி கொண்டு வர முடியும். இந்த பேச்சையெல்லாம் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments