ஆசிய விளையாட்டு இன்று ஆரம்பம்!: மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா

குவாங்சு: மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆசிய விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதற்கான துவக்க விழா, மிதக்கும் படகுகளின் மீது மிகவும் வித்தியாசமான முறையில் நடக்க உள்ளது.
சீனாவில் உள்ள குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இன்று துவங்கும் போட்டிகள், வரும் 27ம் தேதி நிறைவு பெறுகிறது. இன்றைய துவக்க விழாவுக்கு சீனா, மிகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. வழக்கமாக மைதானங்களில் தான் துவக்க விழா நடக்கும். இம்முறை சற்று வித்தியாசமாக, குவாங்சுவில் உள்ள "பேர்ல்" நதியில், மிதக்கும் படகுகளின் மீது துவக்க விழா, கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
9.3 கி.மீ., பயணம்:
சுமார் 2,400 கி.மீ., நீளம் கொண்ட "பேர்ல்' நதியில் அலங்கரிக்கப்பட்ட 46 படகுகள் மிதந்து செல்லும். இவற்றில் 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயணிக்க உள்ளனர். தவிர, 6 ஆயிரம் கலைஞர்கள் சேர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காட்ட இருக்கின்றனர். கண்கவர் "லேசர் ÷ஷா' மற்றும் வாணவேடிக்கை ரசிகர்களை கவர்ந்திழுக்க காத்திருக்கிறது. இதற்காக நகர் முழுவதும் விளக்குகள் அணைக்கப்பட உள்ளன. சீன பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகள், ஒளி வெள்ளத்தில் தண்ணீரின் மீது பிரதிபலிக்க உள்ளன. சுமார் 45 நிமிட பயணத்துக்கு பின், படகுகள் அனைத்தும் 6 பாலங்களை கடந்து, ஹெய்க்சின்ஹா சதுக்கத்தை சென்றடையும். ஆசிய விளையாட்டு ஜோதி ஏற்றும் நிகழ்ச்சியும் வித்தியாசமாக நடக்க உள்ளது. இதன் விபரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
புதிய வரலாறு:
 இது குறித்து துவக்க விழாவுக்கான துணை இயக்குனர் ஹி ஜிகிங் கூறியது:
மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவின் துவக்க விழா, முதல் முறையாக மைதானத்தில் அல்லாமல், மிதக்கும் படகுகளில் நடக்க உள்ளது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்க இருக்கிறோம். தண்ணீரை அடிப்படையாக கொண்டு நிகழ்ச்சிகள் அமைய உள்ளன. வானுயர்ந்த கட்டடங்கள் மற்றும் 610 மீட்டர் உயரம் கொண்ட குவாங்சு "டிவி' கோபுரத்தின் பின்னணியில், சீனாவின் கலாசாரத்தை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளன. பிரபல பியோனோ இசை கலைஞர் லாங், நடிகை ஜாங் ஜியி இணைந்து கலக்க உள்ளனர்.
பொதுவாக ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி பற்றி வாய் திறக்க மாட்டார்கள். இதனை தான் நாங்களும் பின்பற்றுகிறோம். இந்நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமையும். ஒட்டுமொத்தமாக துவக்க விழா, அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு ஹி ஜிகிங் கூறினார்.
மூவர்ணக் கொடியுடன் செய்னா?
ஆசிய விளையாட்டு கிராமத்தில் நேற்று இந்திய கொடி முறைப்படி ஏற்றப்பட்டது. இன்று நடக்கும் துவக்க விழாவில் மூவர்ணக் கொடியை யார் ஏந்திச் செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் தான் கொடியை ஏந்திச் செல்வதாக இருந்தது. ஆனால், இவர் நாளை காலையில் போட்டிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. இதையடுத்து ககனுக்கு மாற்றாக, பாட்மின்டன் நட்சத்திரம் செய்னா நேவல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில்,""மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்வது பற்றி ககன் தான் முடிவு எடுக்க வேண்டும். இவர் விலகும் பட்சத்தில், செய்னாவுக்கு அந்த கவுரவம் அளிக்கப்படும்,''என்றார்.
இந்திய ஒலிம்பிக் சங்க செயலரும் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரருமான ரந்திர் சிங் கூறுகையில்,"" மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில்(1980) நான் தான் இந்திய கொடியை ஏந்திச் சென்றேன். இதன் காரணமாக, அடுத்த நாள் எனது கைகளில் வலி ஏற்பட்டது. இதே நிலைமை ககனுக்கும் ஏற்படலாம். கொடி கவுரவம் முக்கியம் தான். அதே நேரத்தில் காலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதையும் ககன், கவனத்தில் கொள்ள வேண்டும்,''என்றார்.
"உவுசெலா' தடை
 சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் "உவுசெலா' இசை கருவி மூலம் காதை பிளக்கும் அளவுக்கு ரசிகர்கள் ஒலி எழுப்பினர். இதையடுத்து, ஆசிய விளையாட்டில் "உவுசெலாவுக்கு' தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் மைதானங்களில் தீப்பெட்டி, "உவுசெலா' உள்ளிட்ட பொருட்களை ரசிகர்கள் எடுத்துச் செல்ல முடியாது.
இந்தியாவின் இலக்கு
ஆசிய விளையாட்டில் இம்முறை "டாப்-5' பட்டியலில் இடம் பெறுவதே இலக்கு என, இந்திய குழுவின் தலைவர் அபய் சிங் சவுத்தாலா தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""கடந்த முறை 10 தங்கப் பதக்கங்களுடன் இந்திய 8வது இடம் பிடித்தது. இம்முறை 20 தங்கம் வென்று, பதக்கப்பட்டியலில் "டாப்-5' நாடுகளின் வரிசையில் இடம் பெற விரும்புகிறோம். துப்பாக்கி சுடுதல், பில்லியர்ட்ஸ், ஹாக்கி போன்ற போட்டிகளில் நமக்கு அதிக வாய்ப்பு உள்ளது,''என்றார்.
ஆசிய கால்பந்து: இந்தியா வெற்றி
ஆசிய விளையாட்டு கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் "நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.
சீனாவில் உள்ள குவாங்சுவில், 16வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று முறைப்படி துவங்குகிறது. இதற்கு முன்னதாக, கால்பந்து லீக் போட்டிகள் நடக்கின்றன. இதில் "டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, குவைத் மற்றும் கத்தாரிடம் தோல்வி அடைந்தது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் சிங்கப்பூர் அணியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய ஆதிக்கம்:
ஆட்டத்தின் துவக்கம் முதல் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் இந்திய வீரர் ராஜா முதல் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். இதற்கு சிங்கப்பூர் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
கோல் மழை:
இரண்டாவது பாதியிலும் அபார ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு பால்வந்த் சிங் (62வது நிமிடம்), கான்கபம் ஜிபான் சிங் (67வது நிமிடம்), மதானி (75வது நிமிடம்) அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர். இதற்கு சிங்கப்பூர் வீரர் லுயோ, ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் "டி' பிரிவில் இருந்து கத்தார் (7 புள்ளி), குவைத் (6 புள்ளி), இந்தியா (3 புள்ளி) உள்ளிட்ட அணிகள் "நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறின.
பாக்., "அவுட்':
"எப்' பிரிவில் நடந்த லீக் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணி, ஒரு "டிரா' மற்றும் 2 தோல்வியை பெற்று, ஒரு புள்ளி மட்டுமே பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணி "நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

Comments