விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் : எடியூரப்பா

பெங்களூரு : விரைவில் கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை. திட்டமிட்டபடி அமைச்சரவை மாற்றம் நடைபெறும். பெயர்களை இறுதி செய்வதில் மட்டுமே தாமதம் நிலவுகிறது. அமைச்சரவை மாற்ற தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார். மேலும் கட்சி மேலிடத் தலைவர்களுடன் விரைவில் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக அரசியலில் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இரண்டு முறை நம்பிக்கை ஓட்டெடுப்பு, தகுதி நீக்கம், என அடுக்கடுக்காக பிரச்னைகள் கிளம்பின. பின்னர் பா.ஜ., எம்.எல்.ஏ., க்கள் தகுதிநீக்கம் செல்லும் என ஐகோர்ட் அறிவித்ததையடுத்து பா.ஜ., நிம்மதி பெருமூச்சு விட்டது. அடுத்த கட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் என எடியூரப்பா கூறினார். உடனே அமைச்சர் பதவி கேட்டு ஏராளமான பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் இன்று நடைபெற இருந்த அமைச்சரவை விரிவாக்கத்தை முதல்வர் எடியூரப்பா திடீரென கைவிட்டுவிட்டார். அமைச்சர் பதவி கிடைக்காது என்பதால் அரசின் தலைமை கொறடா ஜீவராஜ் மற்றும் மாநில எல்லைப்பகுதி வளர்ச்சி ஆணையத் தலைவராக உள்ள சந்திரகாந்த் பெல்லத் ஆகிய இரு எம்எல்ஏக்களும் தாங்கள் வகித்து வந்த அந்தப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Comments