சாமி அனுப்பிய அனைத்து கடிதங்களும் பரிசீலிக்கப்பட்டன-பிரதமர் அலுவலகம் விரிவான விளக்கம்

டெல்லி: ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய அனைத்துக் கடிதங்களும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, உரிய விதிமுறைப்படி பரிசீலிக்கப்பட்டன என்று பிரதமர் அலுவலகம் விரிவான விளக்கத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சாமி தொடர்ந்த வழக்கில் பிரதமர் செயலற்றவராக இருந்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் இரண்டு முறை கேட்டிருந்தது. இந்த வழக்கில் பிரதமர் மீது நேரடியாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டும் சூழல் ஏற்பட்டதால் பிரதமர் சார்பில் ஆஜராகி வந்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் நீக்கப்பட்டு அட்டர்னி ஜெனரல் வாகனாவதி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் பிரதமரின் சார்பில் பிரதமர் அலுவலக இயக்குநர் வித்யாவதி விளக்க மனுவை (11 பக்கம் கொண்ட அபிடவிட்) தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ள விவரம்...

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் தொடர்பாக பிரதமர் அலுவலகம் செயலற்றதாக, மெத்தனமாக இருந்தது என்று கூறப்படுவதில் சற்றும் உண்மை இல்லை.

சுப்பிரமணியம் சாமி அனுப்பி அனைத்துக் கடிதங்களையும் பிரதமர் அலுவலகம் உரிய முக்கியத்துவம் கொடுத்து, தீவிரமாகவே பரிசீலித்துள்ளது.

2008ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி முதல் 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை சாமி எழுதிய அனைத்துக் கடிதங்களும் முறைப்படி பரிசீலிக்கப்பட்டுள்ளன. பிரதமர் அலுவலக நடைமுறைப்படி அவை பரிசீலிக்கப்பட்டுள்ளன.

சாமி எழுதிய கடிதங்கள் தொடர்பாக 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி, சட்ட விவகாரத்துறையிடமிருந்து வந்த அறிவுறுத்தலின்படி, வழக்கு தொடர (ராஜா மீது) அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், உரிய புலனாய்வுத்துறை சேகரித்து வைத்துள்ள ஆதாரங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் என்று மனுதாரருக்கு பதில் அனுப்புமாறு ஒரு குறிப்பு வைத்து சட்டம் மற்றும் நீதித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த குறிப்புக்கு பிப்ரவரி 13ம் தேதி பிரதமர் ஒப்புதல் அளித்தார்.

இந்த கருத்துரு சட்டத்துறை இணைச் செயலாளரை அடைந்தவுடன் அவர் இதைப் பரிசீலித்து, இதுதொடர்பான பதிலை நிர்வாக ரீதியான பதிலைத் தருவதற்கு சட்ட அமைச்சகம் உகந்ததல்ல, பெர்சனல் மற்றும் பயிற்சித் துறைதான் இதைச் செய்ய முடியும் என்று கூறி பிப்ரவரி 22ம் தேதி அதை திருப்பி அனுப்பி வைத்தார்.

இதையடுத்து இதுதொடர்பாக பெர்சனல் துறைக்கு ஒரு குறிப்பு தயாரிக்கப்பட்டு பல்வறு மட்டங்களில் அது பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் மார்ச் 5ம் தேதி பெர்சனல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2010, மார்ச் 8ம் தேதி சாமி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கு குறித்த விவரம், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் தகவல் தொடர்பு குறித்த விவரத்தை உடனடியாக அனுப்பி வைக்குமாறு பெர்சனல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அங்கிருந்து வந்த பதில் கடிதம் மற்றும் தொலைத் தொடர்புத்துறையிடமிருந்து வந்த பதில் கடிதம் ஆகியவை உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பிரதமரின் முதன்மைச் செயலாளரால் ஒப்புதல் தரப்பட்டு, மார்ச் 19ம் தேதி மனுதாரருக்கு (சுப்பிரமணியம் சாமி) பதில் கடிதம் தயாரிக்கப்பட்டு அன்றே அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2010, ஏப்ரல் மாதத்தில், சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக சட்ட விவகார துறை தகவல் கொடுத்தது.

பிரதமருக்கு சிசி போட்டு பெர்சனல் துறைக்கு, மார்ச் 20, மே 20, ஜூன் 9 ஆகிய நாட்களில் சாமி கடிதம் அனுப்பியிருந்தார்.

மேலும், ஆகஸ்ட் 30, அக்டோபர் 5 ஆகிய தேதிகளிலும் அவர் கடிதம் எழுதியிருந்தார். அவற்றை பிரதமருக்கே நேரடியாக எழுதியிருந்தார். இவை அனைத்தும் சட்டம் மற்றும் நீதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சாமி அனுப்பி அனைத்துக் கடிதங்களையும் பிரதமர் அலுவலகம், உரிய துறைகளுக்கு அனுப்பி விளக்கம் கேட்டு, சட்ட ஆலோசனைகளைக் கேட்டு அதன் பிறகு பதில்களை அனுப்பியுள்ளது. எனவே பிரதமர் அலுவலகம் செயலற்று இருந்தது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த அபிடவிட் குறித்து சாமி கருத்து தெரிவிக்கையில், பிரதமர் அலுவலகம் எப்படி செயல்பட்டுள்ளது என்பதை பிரதமர் அலுவலகமே தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. இந்த அபிடவிட்எனக்கு திருப்தி தருகிறது. எனது நிலையில் தவறில்லை என்பதையும் இது நிரூபித்துள்ளது என்றார்.

Comments