இந்தியாவில் அணி திரள முயற்சிக்கவில்லை-ப.சிதம்பரத்திற்கு விடுதலைப் புலிகள் கடிதம்

டெல்லி: இந்தியாவில் அணி திரள நாங்கள் முயற்சிக்கவில்லை. அதுதொடர்பாக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இந்தியாவில் எந்த வகையான சட்டவிரோதமான நடவடிக்கையும் நாங்கள் ஈடுபடவில்லை என்று விடுதலைப் புலிகள் , மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 5ம் தேதியிட்ட இந்தக் கடிதம் ப.சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைஅலுவலக ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.சுபன் என்ற பெயரில் இக்கடிதம் அனுப்பப்பபட்டுள்ளது. சுபன், புலிகள் அமைப்பின் மீடியா பிரிவு தலைவர் என்று கூறப்படுகிறது.

முதல்வர் கருணாநிதி , வெளியுறவுஅமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடிதத்தில், கூறியிருப்பதாவது...

விடுதலைப் புலிகள் இந்தியாவில் ஒன்று கூட முயற்சிப்பதாகவும், இந்திய மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இது முற்றிலும் தவறான தகவல். இதில் எந்த உண்மையும் இல்லை.

எங்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத மாவோயிஸ்டுகளுடன் எங்களைத் தொடர்புப்பபடுத்தி பேசுவதை நாங்கள் முழுமையாகவும், உறுதியாகவும் நிராகரிக்கிறோம். இது எங்கள் மீது அவதூறு கற்பிக்கச் செய்யும் முயற்சியாகும் என்று அதில் சுபன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் போர் முடிவடைந்து விட்டதாக அந்த நாடு அறிவித்த பின்னர் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இந்திய அரசுக்கு வந்துள்ள முதல் தகவல் தொடர்பு இந்தக் கடிதம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments