பீகாரில் மீண்டும் நிதீஷ்குமார் ஆட்சி வருகிறது ; காங்- லாலு கட்சிக்கு பலத்த அடி விழுகிறது

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஐக்கிய ஜனதாதள கட்சி கூட்ணிக்கே பலத்த செல்வாக்கு இருப்பதாகவும் , மீண்டும் இந்த கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்றும் தேர்தல் முடிந்த பின்னர் எடுத்து வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இங்கு மீண்டும் நிதீஷ்குமாரே முதல்வராக வேண்டும் என பீகார் மக்கள் 54 சதவீதம் பேர் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.
இதனால் அமோக வெற்றி பெற்று பா.ஜ., ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்கும் என தெரிகிறது. இதே நேரத்தில் தனித்து போட்டியிடும் காங்கிரஸ் மொத்தம் 243 தொகுதிகளில் 12 சீட்டுகளே கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் நிதீஷ் குமாருக்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்து.

யாருக்கு, எவ்வளவு தொகுதிகள் ? : சிஎன்என்-ஐபிஎன், தி வீக் ஆகிய நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 185 முதல் 201 இடங்களில் அக்கூட்டணி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதிவான ஓட்டுகளில் நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்கு 46 சதம், ராஷ்ட்ரீய ஜனதா தளம்- ( லாலு பிரசாத் ), லோக் ஜனசக்தி ( ராம்விலாஸ் பஸ்வான்) கூட்டணிக்கு 27 சதமும், காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 9 சதவீத ஓட்டுக்களும் கிடைக்கும் என்றும் சிஎன்என்-ஐபிஎன் வாக்குக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டார் ஏசி நீல்சன் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 150 இடங்களில் வெற்றி பெறும் என்றும், லாலு தலைமையிலான கூட்டணிக்கு 57 இடங்களும், காங்கிரஸýக்கு 15 முதல் 21 இடங்களும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.சி வோட்டர் நிறுவனம் நடத்திய கணிப்பில் 142 முதல் 154 இடங்கள் ஆளும் கட்சி கூட்டணிக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாலுவின் கூட்டணிக்கு 22 முதல் 32 தொகுதிகளிலும், காங்கிரஸýக்கு 6 முதல் 12 தொகுதிகளிலும்,மட்டுமே வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இடதுசாரிகள் மற்றும் சுயேச்சைகள் 9 முதல் 19 தொகுதிகளை கைப்பற்றுவர் என்றும் கணிப்பு தெரிவிக்கிறது.

நிதீஷ்குமாரே முதல்வராக வேண்டும் என விருப்பம் : முதல்வர் பதவிக்கு முதல்வர் நிதீஷ் குமாரே பொருத்தமானவர் என்று 54 சதவீதம் பேர் என கூறியுள்ளனர். லாலு பிரசாத் அல்லது அவரது மனைவி ராப்ரி தேவி பிகார் முதல்வராக வர வேண்டும் என்று 28 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நிதீஷ்குமார் மாநில வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக செய்திருக்கிறார் என்ற கோணத்தில் அவரது கட்சியினர் பிரசாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை ( புதன்கிழமை ) தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

Comments