சீனாவுக்கு பதிலடி தந்த ஒபாமா செயல்

வாஷிங்டன் : "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெறவேண்டும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரித்து பேசியதை, அமெரிக்க பத்திரிகைகள்  முதல் பக்கத்தில் பரபரப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய பயணம் முக்கிய மைல்கல்லாக அமைந்துவிட்டது. இந்தியாவில் கிடைத்த வரவேற்பும், விருந்தோம்பலும் அவரையும், அவர் மனைவியையும் நெகிழச் செய்துவிட்டது.இந்திய பயணத்தை துவக்குவதற்கு முன்பாக, ஒபாமா விடுத்த அறிவிப்பில், "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது சிரமமான காரியம்' என்ற ரீதியில் குறிப்பிட்டு இருந்தார்.இந்தியாவில் மும்பை, டில்லியில் பயணம் மேற்கொண்ட ஒபாமா தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக நேற்று முன்தினம், பார்லிமென்டில் உரையாற்றினார். அதுவரை ரகசியம் காத்து வந்த ஒபாமா, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்."உலகில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஐ.நா., சபை திறம்பட செயல்பட உரியவகையில் சீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு மாற்றியமைக்கப்படும் போது, ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒபாமா இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த தகவலை வெளியிட ரகசியம் காத்தார் என அமெரிக்க பத்திரிகைகள் நேற்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.ஒபாமாவின் இந்திய பயணத்தை பற்றி, குறிப்பாக,  ஒபாமா, பார்லிமென்டில் பேசியதைத் தான்  பரபரப்பாக வெளியிட்டுள்ளன.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தும் முயற்சியாக, ஒபாமாவின் பயணம் அமைந்திருந்தது.  ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெறுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் அறிவிப்பை  வெளியிடுவதில் கடைசி வரை மவுனமாக இருந்துவிட்டு, திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன என்று பத்திரிகைகள்  ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளன. பொருளாதார வளர்ச்சியில், சீனா இப்போது உலகின் முன்னணி இடத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்க சீனா முயற்சிப்பாத குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்நிலையில், சீனாவுக்கு இணையாக பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் சக ஆசிய நாடான இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதன் மூலம், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கை என்ற ரீதியில், ஒபாமாவின் பேச்சை முடிச்சுபோட்டு அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க பத்திரிகைகளில் இடம் பெற்றிருந்த செய்திகளில் சாராம்சம் இது தான்:

வாஷிங்டன் போஸ்ட்: அதிபர் ஒபாமா, இந்திய பார்லிமென்டில் உரையாற்றும் வரை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கான இடம் பற்றி வாய் திறக்காமல் இருந்தார். பார்லிமென்டில் பேசும் போது, திடீரென தனது நிலையை தெரிவித்தது ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அதிபர் ஒபாமா ஆதரவாக பேசியது, சீனாவுக்கு  பதிலடி கொடுக்கும் நடவடிக்கையே.

Comments