கொடநாடு எஸ்டேட்டில் கிடாவெட்டி சிறப்புப் பூஜை-அன்னதானம் வழங்கிய ஜெ.

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் தங்கியுள்ள கொடநாடு எஸ்டேட்டில் கிடாவெட்டி சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

கொடநாட்டில் உள்ள எஸ்ட்டேடில் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் ஓய்வெடுத்து வருகிறார். கடந்த 11ம் தேதி அங்கு போனார். அங்குள்ள தேயிலைத் தொழிற்சாலை புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

இதையடுத்து காலை 11 மணிக்கு உள்ளே இருக்கும் அம்மன் கோவிலில் கிடா வெட்டி சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. கிடா வெட்டு நிகழ்ச்சியில், ஜெயலலிதா கலந்து கொண்டார்.

பின்னர் தொழிலாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். தொழிலாளர்களை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு துணிமணிகளை வழங்கிய பின்னர் பங்களாவுக்குத் திரும்பினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கோவில்களில் ஆடு, கோழி வெட்டுவதற்குத் தடை விதித்தவர் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம். இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதன் பின்னர் இந்த உத்தரவை அவர் தளர்த்தினார். இந்த நிலையில், அவரது எஸ்டேட் வளாகத்திலேயே கிடாவெட்டு நடத்தி சாமி கும்பிட்டதும், அதில் ஜெயலலிதா பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

Comments