என்.கே.கே.பி.ராஜாவுக்கு மாவட்டச் செயலர் பதவி

சென்னை :ஆள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர் பதவியை இழந்த என்.கே.கே.பி.ராஜாவுக்கு மீண்டும் மாவட்டச் செயலர் பதவி தி.மு.க.,வில் வழங்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டச் செயலராகவும், கைத்தறித்துறை அமைச்சராகவும் பணியாற்றி வந்தவர் என்.கே.கே.பி.ராஜா. கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஆள்கடத்தல் வழக்கில் ராஜா குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து அமைச்சர் பதவியிலிருந்தும், மாவட்டச் செயலர் பதவியிலிருந்தும் ராஜா நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் அவருக்கு மாவட்டச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:ஈரோடு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த என்.கே.கே.பெரியசாமி கேட்டுக் கொண்டதற்கிணங்கவும், துணைப் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்த சச்சிதானந்தம் ஒப்புதலோடும் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்குப் பதிலாக ஈரோடு மாவட்டச் செயலராகப் பணியாற்றிய வந்த ராஜா எம்.எல்.ஏ., மீண்டும் மாவட்டச் செயலராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அமைப்பின் நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

Comments