மேட்டூர் : மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு 43 ஆயிரத்து 564 கனஅடியாக சரிந்தும், நீர் இருப்பு 9ம் தேதி ஒரே நாளில், 3 டி.எம்.சி., அதிகரித்தது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்ததால், அக்., 29 முதல் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்தது. 9ம் தேதி காலை, கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 800 கனஅடி உபரி நீர், மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது.கே.ஆர்.எஸ்., அணை உபரி நீர், நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் பருவமழையாலும், காவிரியில் தொடர்ச்சியாக வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. 8ம் தேதி வினாடிக்கு, 56 ஆயிரத்து 73 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 9ம் தேதி மாலை, 43 ஆயிரத்து 564 கன அடியாக குறைந்தது.எனினும், தொடர் நீர்வரத்து காரணமாக, நேற்று ஒரே நாளில் நீர்மட்டம், 2 அடியும், நீர் இருப்பு, 3 டி.எம்.சி.,யும் அதிகரித்தது. அணையின் நீர்மட்டம், 92 அடியாகவும், நீர் இருப்பு, 55.319 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.
Comments