முதல்வர் சவான் கதி 8ம் தேதி தெரியும்: அடுக்குமாடி கட்டட ஊழல் விஸ்வரூபம்

புதுடில்லி:சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவானின் நிலை என்னவாகும் என்பது, வரும் 8ம் தேதிக்கு பிறகு தெரிய வரும் என, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போதுள்ள சூழ்நிலையில் அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாகவும், புது முதல்வர் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.மும்பையின் கொலாபாவில், மாநில அரசுக்கு சொந்தமான இடத்தில், கார்கில் போர் வீரர்களுக்காக ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், முன்னாள் ராணுவ வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வி.ஐ.பி.,க்களுக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல்வர் அசோக் சவானின் மாமியார் மற்றும் உறவினர்கள் பெயரில் வீடுகள் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது. இந்த விவகாரம், காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அசோக் சவானை நேரில் அழைத்து விசாரித்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, அவரிடமிருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றார்.

பா.ஜ., கோரிக்கை: இந்நிலையில், சவானின் ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்க வேண்டும் என, பாரதிய ஜனதா கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:அசோக் சவானின் ராஜினாமாவை உடனடியாக ஏற்க வேண்டும். பார்லிமென்ட்டில், ஆதர்ஷ் ஊழல் போன்று பல்வேறு ஊழல்களை எழுப்ப இருக்கிறோம். ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் நடந்த ஊழல் குறித்து உண்மை நிலையை விளக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

காங்., முடிவு: மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் ராஜினாமாவை ஏற்பது குறித்து தீபாவளி முடித்து, வரும் 8ம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் அசோக் சவான் உட்பட மகாராஷ்டிரா காங்., கமிட்டி தலைவர் மணிக்ராவ் தாக்ரே மற்றும் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய மூத்த தலைவர் கூறுகையில், "கூட்டத்தில் ஆதர்ஷ் ஊழல் குறித்தோ, காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்தோ விவாதிக்கப்படவில்லை. சவான் ராஜினாமா குறித்து, வரும் 8ம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும்' என்றார்.இப்போதுள்ள சூழ்நிலையில் சவான் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக தெரிகிறது. புதிய முதல்வர் யார் என்பது, 8ம் தேதிக்கு பிறகு தெரிய வரலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரபு அல்ல பாலு: இதென்ன புது கலாட்டா என்பது போல, ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு அனுமதி கொடுத்தது சிவசேனா சுரேஷ் பிரபு அல்ல தி.மு.க., பாலு தான் என்ற அடுத்த பரபரப்பு துவங்கியுள்ளது.மும்பை ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க ஊழல் வெளிச்சத்துக்கு வந்த போது, இந்த சங்கத்திற்கு, கடந்த 2003ம் ஆண்டு அனுமதியளித்ததே, அப்போது மத்தியில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த சிவசேனாவை சேர்ந்த பிரபு தான் என காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது.இதை கேட்டதும் வெகுண்டெழுந்த பிரபு, "கடந்த 2003ம் ஆண்டு நான் அமைச்சராக இருக்கவில்லை. அப்போது சுற்றுச்சூழல் துறைக்கு அமைச்சராக பொறுப்பு வகித்தது தி.மு.க.,வை சேர்ந்த டி.ஆர்.பாலு தான். அவர் தான் அனுமதி வழங்கியுள்ளார் என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், "எனக்கு ஆதர்ஷ் குடியிருப்பில் ஒரு பிளாட் கிடைத்தது. அதுவும் வங்கி கடன் மூலம் பெற்றேன். பின்னர் கார்கில் போரில் உயிர்நீத்த ஹீரோக்களுக்கு என்று தெரிய வந்ததும், அதை நான் ஏற்கவில்லை' என்றார்.

இதுகுறித்து டி.ஆர்.பாலுவிடம் கேட்ட போது, "நான் அந்த நேரத்தில் பதவியில் இருக்கவில்லை என்று மட்டும் பிரபு சொல்லியிருக்க வேண்டும். அதைவிட்டு ஏன் பிரச்னையை கிளப்புகிறார். இது 10 ஆண்டுக்கு முற்பட்ட விஷயம். இதுகுறித்து விசாரித்து விட்டு தான் நான் கருத்து சொல்ல முடியும். இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல மாட்டேன்' என்றார்.

மின் சப்ளை துண்டிப்பு: இதற்கிடையில், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கீடுதாரர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்வதாக, மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து, மின் சப்ளை மற்றும் குடிநீர் சப்ளை துண்டிக்கப்படுவதாக மும்பை மின்சப்ளை டிராஸ்போர்ட் குடியிருப்பு சொசைட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அறிக்கை: ஆதர்ஷ் வீட்டு வசதி குடியிருப்பு ஊழல் குறித்து, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்துள்ள அறிக்கையை இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் அளிக்கும்.தற்போது கடற்படையிடம் இருந்து அறிக்கையை எதிர்பார்க்கிறது' என, அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments