ஆசிய விளையாட்டுப் போட்டி-20 தங்கங்களை வெல்ல இந்தியா இலக்கு

குவாங்ஷு: இன்று தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 20 தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு இந்தியா முனைப்புடன் களம் இறங்குகிறது.

சமீபத்தில் முடிவடைந்த டெல்லி காமன்வெல்த் போட்டியில் வரலாறு காணாத வெற்றியையும், தங்கப் பதக்கங்களையும் தட்டிச் சென்றது இந்தியா. இதன் காரணமாக ஆசியவிளையாட்டுப் போட்டியில் பெரும் நம்பிக்கையுடன் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இருப்பினும் சீனா , கொரியா ஆகிய இரு பெரும் சவால்களை இந்தியா சந்திக்க வேண்டியுள்ளது. ஆனாலும் இந்த சவாலைத் தாண்டி பதக்க வேட்டையை நடத்த இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கியுள்ளது. முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து விட வேண்டும் என்ற இலக்குடனும் இந்தியா உள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின்தலைவரான அபய் சிங் செளதாலா கூறுகையில், கடந்த தோஹா போட்டியில் இந்தியா 8வது இடத்தைப் பிடித்தது. பத்து தங்கப் பதக்கங்களை அப்போது வென்றோம். இந்தமுறை 5 இடங்களுக்குள் புகுந்து விட தீர்மானித்து களம் இறங்கியுள்ளோம். மேலும் 20 தங்கப் பதக்கங்களை வெல்லவும் உறுதியுடன் உள்ளோம் என்றார்.

தோஹா போட்டியில் 10 தங்கம், 17 வெள்ளி, 26 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றது. காமன்வெல்த் போட்டியில் 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களை இந்தியா தட்டிச் சென்று 2வது இடத்தைப் பிடித்தது.

போட்டியின் முதல் நாளிலேயே தங்கப் பதக்க வேட்டையை தொடங்கப் போவதாகவும் செளதாலா கூறியுள்ளார். ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் அபினவ் பிந்த்ரா, ககன்நரங் ஆகியோர் தங்கம் வெல்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேபோல 25 மீட்டர் ஸ்டான்டர்ட் பிஸ்டல் பிரிவில் சமரேஷ் ஜங் தங்கம் வெல்வார் என்று நம்பப்படுகிறது.

அதேபோல பில்லியர்ட்ஸிலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Comments