127 தொகுதிகளில் வெற்றி: ராமதாஸ் கணிப்பு

விழுப்புரம் : தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் சேர்ந்து ஓட்டு போட்டால் 127 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி கெடாரில் நடந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டு லட்சம் ஓட்டுகள் உள்ளன. இதில் வன்னியர்களின் ஓட்டு 1.25 லட்சம். இதில் பாதியளவு ஓட்டுகள் பா.ம.க.,விற்கு விழுந்தாலும் நாம் தான் வெற்றி பெறுவோம். விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் அதிகம் உள்ளதால், 11 சட்டசபை தொகுதியிலும் நாம் வெற்றி பெறும் நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் வன்னியர்கள் ஓட்டு நமக்கு கிடைத்தால் 100 தொகுதிகளில் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். அதே போல் தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் சேர்ந்து ஓட்டு போட்டால், 127 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம்.

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாயாவதி 5வது முறையாக முதல்வராக வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளார். அங்கு உயர் ஜாதியினர் அதிகளவு இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் 20 சதவீதம் பேர் தான் உள்ளனர். இருப்பினும் அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடி மக்களும் மற்ற கட்சியினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை வாங்காமல் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தான் ஓட்டு போடுகின்றனர். இதனால் பல திட்டங்கள் மூலம், அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடி மக்களும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு, பல புதிய திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம். ஆனால், நீங்கள் என்னை போயஸ் கார்டனிற்கும், கோபாலபுரத்திற்கும் அனுப்புகிறீர்கள். தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தனர். ஆனால் ஒரு வன்னியரோ, தாழ்த்தப்பட்டவரோ 10 நாட்கள் கூட முதல்வர்களாக இருந்தது இல்லை. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

Comments