உச்சத்திற்கு செல்கிறது தங்கத்தின் விலை: தொடர்ந்து அதிகரிப்பு

சென்னை:தீபாவளியை யொட்டி, விற்பனையாளர்கள் அதிக கொள்முதல் செய்வதால், தங்கத்தின் விலை தொடர்ந்து மேலே மேலே போய் கொண்டிருக்கிறது.இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடு செய்ததால், செப்டம்பரிலிருந்து பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டு, 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக அதிகரித்து வருகிறது.

மற்றொரு பக்கம் உலகளவில் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்து வருவதாலும், பொருள் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாலும், தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் தசரா, தீபாவளி என தொடர்ந்து பண்டிகை காலம் அணிவகுத்து நிற்பதால், தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. தங்கத்தின் முதலீடு பாதுகாப்பாக இருப்பதால், பலரும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.பெரும்பாலான மக்கள், தங்கத்தை கடவுள் லட்சுமியாக பார்க்கின்றனர். இதனால், தீபாவளி பண்டிகையை யொட்டி தங்கம் வாங்கினால் வீட்டிற்கு லட்சுமி வந்ததாக நினைக்கின்றனர்.

இதன் காரணமாக, விலையை பார்க்காமல், ஒரு கிராம் தங்கமாவது வாங்கிவிட ஆர்வம் காட்டுகின்றனர்.பொதுவாக தங்கத்தின் விலை அதிகபட்ச உச்சத்தை தொட்டுவிட்டது. இனிமேலும் கூடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதிக விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் மக்கள் தங்கம் வாங்குகின்றனர். இதனால், கடந்த சில வாரத்தில் சற்றே குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.மேலும் குறிப்பாக, கரன்சி சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. பங்கு, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வதற்கும் பலரும் தயங்குகின்றனர். தங்கமாக வாங்கிவைத்தால் அவசரத்திற்கு பயன்படும் என்று பலர் நினைக்கின்றனர்.

வட மாநிலங்களில், தீபாவளியன்று லட்சுமி பூஜை, குபேர பூஜை வழிபாடு நடத்துவர். இதற்காக தங்க காசுகள், வெள்ளி காசுகள் வாங்குவர். அதிகளவில் தங்கம் வாங்கா விட்டாலும், ஒன்றிரண்டு கிராமில் தங்க காசுகளாவது வாங்கிவிட வேண்டும் என மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.இதன் காரணமாக கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை அதிகரித்து வந்துள்ளது. உலகிலேயே அதிகமாக கொள்முதல் செய்த நாடு இந்தியா தான். கடந்த செப்டம்பரில், 34.8 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்தது.

இது, ஆகஸ்ட் மாதத்தை விட, 30 சதவீதம் அதிகம். அக்டோபரில் பண்டிகை காலம் என்பதால், இதைவிட அதிகமாக இருக்கும் என மும்பை தங்க மார்க்கெட் சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, பாதிக்கு உயர்ந்துள்ளது. 2008ல், 10 கிராம் ஆபரண தங்கம், 12 ஆயிரத்து 70 ரூபாயாக இருந்தது. 2009ல், 16 ஆயிரத்து 200 ரூபாயாக இருந்தது. தற்போது, 10 கிராம், 20 ஆயிரம் ரூபாயை நெருங்கிவிட்டது.


இப்போது, தங்கத்தின் விலை மூன்றாவது கட்டமாக ஏற்ற நிலைக்கு வந்துவிட்டது. ஒரு கிராம், 1,867 ரூபாயை தாண்டியுள்ளது. இதையடுத்து, இதே நிலை தொடரும் பட்சத்தில், இன்னும் சில மாதங்களில், 2,587 ரூபாயை எட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.கடந்த ஒரு ஆண்டில் தங்கத்தின் விலை, 24 சதவீதம் அதிகரித்திருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

Comments