சபாஷ் சரியான போட்டி...! பீகார் அடுத்த முதல்வர் நிதிஷா, லாலு பிரசாத் யாதவா?

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் திருவிழா களை கட்டி விட்டது. நக்சலைட் பிரச்னையால் ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் மூன்று கட்ட தேர்தல்கள் பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்து விட்டன. 
பீகார் மாநிலத்தின் தேர்தல் வரலாறு அறிந்தவர்களுக்கு இது, ஆச்சர்யமான விஷயம் தான். முன்பெல்லாம், பீகாரில் தேர்தல் என்றால், அங்குள்ள மக்கள் பீதியின் உச்சகட்டத்துக்கே சென்று விடுவர். அந்த அளவுக்கு தேர்தலில் வன்முறை தாண்டவமாடும்.ஓட்டுச் சாவடி சூறை, வேட்பாளர் கொலை, கடத்தல், வாக்காளர்கள் மீது தாக்குதல் என, நக்சலைட்கள் மட்டுமல்லாமல், அங்குள்ள தாதா கும்பலும் வன்முறையை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, தேர்தலை ஒரு கை பார்த்து விடுவர்.  இப்போது, அது போன்ற சம்பவங்கள் எல்லாம் மலையேறி விட்டது. இதுவரை நடந்து முடிந்த மூன்று கட்ட தேர்தல்களிலும் சராசரியாக 50 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், அங்கு நேர்மையான, அமைதியான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இப்போது கூறுங்கள், பீகாரில் அமைதியான தேர்தல் என்பது ஆச்சர்யமான விஷயம் தானே.

தாண்டவமாடும் வறுமை : இந்திபேசும் மாநிலங்களின் இதயமாக விளங்கும் பீகார், வளர்ச்சிப் பணிகளை பொறுத்தவரை இன்னும் சபிக்கப்பட்ட மாநிலமாக இருந்து வருகிறது. சாலை, மின்சாரம், கல்வி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் எதுவுமே இந்த மாநில மக்களுக்கு முழுமையாக கிடைப்பது இல்லை. சரித்திர காலத்திலேயே, உலகத்துக்கு நாளந்தா பல்கலை மூலம், கல்வி கலாசாரத்தை அறிமுகப்படுத்திய பெருமை மிக்க பீகார் மாநிலத்தில், தற்போது கல்வியறிவு என்பது கானல் நீராகவே உள்ளது. தொழில் வளர்ச்சியும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பொருளாதார குறியீட்டில் பீகார் மாநிலம், வறுமையும், வறுமை சார்ந்த பிரதேசமுமாகவே அடையாளம் காட்டப்படுகிறது.

வந்தாச்சு தேர்தல் : இதோ தேர்தல் வந்து விட்டது. "பெருமதிப்பிற்குரிய வாக்காள பெருமக்களே' என்ற, அரசியல்வாதிகளின் காதைப் பிளக்கும் ஒலிபெருக்கி ஓசை, சாலைகள் இல்லாத கிராமங்களில் கூட எதிரொலிக்கிறது. புழுதி பறக்கும் வீதிகளில் ஆடம்பர கார்களில் வந்திறங்கும் வேட்பாளர்களை, பீகார் மக்கள், திறந்த வாய் மூடாமல் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஓட்டு வாங்கிய பின், கடந்த ஐந்தாண்டுகளாக எட்டிக் கூட பார்க்காத கரை வேட்டிகள், தற்போது மீண்டும், கும்பிட்ட கையுடன் குடிசை, குடிசையாக நுழைந்து வருகின்றனர்.

ஆளும் கட்சி கூட்டணி : கடந்த தேர்தலை போலவே, இந்த தேர்தலிலும், தற்போதைய ஆளும் கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி கைகோர்த்து களம் இறங்கியுள்ளது. தேர்தலுக்கு முன்பே, இந்த கூட்டணியில் சில உரசல்கள் ஏற்பட்டன. குறிப்பாக, பிரசாரத்தில் பா.ஜ.,வின் நரேந்திர மோடி, வருண் ஆகியோரை ஈடுபடுத்துவதில், இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருந்தாலும், இந்த பிரச்னை சுமுகமாக தீர்க்கப்பட்டது. ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் - பா.ஜ., இடையோன கூட்டணியை உடைத்தது போல, பீகாரிலும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணியை உடைத்து விடலாம் என, செயல்பட்டவர்களின் ஆசை, கடைசிவரை நிராசையாகவே போய்விட்டது.ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் ஓட்டு வங்கியை நம்பி களம் இறங்கியுள்ளது.

இதன் கூட்டணி கட்சியான பா.ஜ., உயர் வகுப்பினரின் ஓட்டுகளை நம்பியுள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரை ஜாதி முக்கிய பங்கு வகித்தாலும், கடந்த ஐந்தாண்டுகளில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள், அவருக்கு கை கொடுக்கும் என, அரசியல் வட்டாரங்கள் அடித்துக் கூறுகின்றன. குற்றச் செயல்கள் குறைந்துள்ளது, தனியார் முதலீட்டை ஈர்த்துள்ளது, தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்தது, போன்றவற்றை தங்களது சாதனைகளாக கூறி, ஆளும் கட்சி கூட்டணி ஓட்டு வேட்டையாடி வருகிறது.இதுதவிர, கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்ற முதல்வர் நிதிஷ் குமாரின் "மிஸ்டர் கிளீன் இமேஜ்' ஆளும் கட்சி கூட்டணிக்கு பெரிதும் கை கொடுக்கும் என, நம்பப்படுகிறது. இருந்தாலும், "மதச் சார்பற்றவர் என, கூறிக் கொண்டு, பா.ஜ.,வுடன் சேர்ந்து களம் இறங்குகிறார். ஊழல் அதிகரித்து விட்டது.  மத்திய அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தவில்லை' என்ற எதிர்க்கட்சிகளின் காரசாரமான பிரசாரம், நிதிஷ் குமார் தரப்பை, சற்றே ஆட்டம் காண வைத்துள்ளது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

லாலு, பஸ்வான் அண்ட் கோ : ஆளும் கட்சி கூட்டணிக்கு, பீகாரின் கலக்கல் அரசியல்வாதி லாலு பிரசாத் தான், பிரதான எதிரி. கடந்த தேர்தலில் தலித் ஓட்டுகளை இழந்ததால், இந்த தேர்தலில் மிகவும் முன் எச்சரிக்கையாக ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சியுடன் கரம் கோர்த்து களம் இறங்கியுள்ளார். பீகாரின் சில பகுதிகளில் பஸ்வானுக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது, இவர்களின் கூட்டணிக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது.இதுதவிர, லாலுவின் பாரம்பரிய ஓட்டு வங்கியான யாதவர் ஓட்டு வங்கியும் உள்ளது. மேலும், முஸ்லிம்களிடமும் லாலு, பஸ்வான் கூட்டணிக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. மக்களுடன் நெருங்கி பழகுவது, சாதாரண மக்களின் நண்பனாக அடையாளப் படுத்திக் கொள்வது ஆகிய லாலுவின் குணாதிசயங்களும், அவருக்கு குறிப்பிட்ட அளவில் ஓட்டுகளை பெற்றுத் தரக் கூடும்.

ஆனால், இவை அனைத்துக்கும் வேட்டு வைக்கும் வகையில், லாலு ஆட்சியில் பீகாரில் நிகழ்ந்த வன்முறைகள், ஊழல், வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு போன்ற விஷயங்கள், இந்த கூட்டணிக்கு மிகப் பெரிய எதிரியாக இருக்கின்றன. குறிப்பாக, பீகார் மாநிலம் வளர்ச்சி அடையாததற்கு லாலுவே காரணம் என்பது போல், எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள், அவரின் தூக்கத்தை கெடுக்கின்றன. மேலும், லாலுவுக்கு எதிரான வழக்குகளும் அவரது வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக திகழ்கிறது. இதையும் மீறி, வெற்றி பெற்று விடுவோம் என, லாலு அண்ட் கோ, நம்பிக்கையுடன் கூறி வருகிறது. நம்பிக்கை தானே எல்லாம்.

ராகுலின் இளம்படை சாதிக்குமா? மூன்றாவதாக, காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கியுள்ளது. இதில், கட்சியின் பொதுச் செயலர் ராகுலின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. "எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம். இந்த தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கட்சியாக திகழ்வோம். அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்' என்ற கோஷத்துடன் ராகுலின் இளம் படை களம் இறங்கியுள்ளது. கட்சி தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும், சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். முஸ்லிம்கள், உயர் சாதியினர்,பிற்படுத்தப்பட்டோரின் ஓட்டுகள் எங்களுக்கு தான், என, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

"காங்கிரஸ் தேறாது' என, எதிர்க்கட்சிகள் கிண்டலடித்தாலும், ராகுலின் சூறாவளி பிரசாரமும், அவர் சென்ற இடமெல்லாம் திரளும் இளைஞர் படையும், நிதிஷ் மற்றும் லாலுவின் ஆட்சிக் கனவுக்கு அலாரம் அடிக்க வைத்திருக்கின்றன. இதுதவிர, முதல்வர் நிதிஷ் குமாரின் "மிஸ்டர் கிளீன் இமேஜை' அடித்து நொறுக்கும் வகையில், மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணித்து விட்டதாகவும், ஊழல் அதிகரித்து விட்டதாகவும், பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியாவும் போட்டுத் தாக்குகின்றனர். எங்கள் தலைவர்களின் இந்த முயற்சி, ஓட்டுகளை பெற்றுத் தரும் என, காங்., மேலிட தலைவர்கள் கருதுகின்றனர்.

யாருக்கு வெற்றி?பீகார் தேர்தலில் நடக்கும் இந்த மும்முனை போட்டியில், யார் வெற்றி பெறுவர், அடுத்த முதல்வராக யார் மகுடம் சூடுவர் என்பது தான், தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. பிரபல நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு, ஆளும் கட்சிக்கு சாதகமாகவே உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளே இதற்கு காரணம் என, அதில் தெரிவிக்கப்படுள்ளது. முஸ்லிம் ஓட்டுகளை அனைத்து கட்சிகளும் சிதறடிப்பதும் ஆளும் கட்சிக்கே சாதகமாக உள்ளது. ஆனால், பீகாரில் லாலுவுக்கு உள்ள செல்வாக்கை அத்தனை குறைவாக மதிப்பிட்டு விட முடியாது. என்னதான் குற்றச்சாட்டு கூறினாலும், பீகாரின் அடித்தட்டு மக்களை பொறுத்தவரை லாலு தான் எல்லாம். அவருடன், ராம்விலாஸ் பஸ்வானும் சேர்ந்திருப்பதால், அடுத்து எங்கள் ஆட்சி தான் என, அடித்துக் கூறுகின்றனர், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர்.

பீகார் அரசியலை கூர்ந்து கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள் இதுகுறித்து கூறுகையில்," எந்த கட்சியையும் நம்பாமல், தனித்து களம் இறங்கும் காங்கிரசை, இந்த தேர்தலில் புறக்கணித்து விட முடியாது. பெண்கள் மற்றும் இளைஞர்களின் செல்வாக்கு அந்த கட்சிக்கு உள்ளது'என்கின்றனர்.பீகாரில் அடுத்து மகுடம் சூடப் போவதுயார், மண்ணைக் கவ்வப் போவது யார் என, அடுத்த மாதம் 24ம் தேதி தெரிந்து விடும். அன்று தானே ஓட்டு எண்ணப்படுகிறது.

தேர்தல் பிரச்னை : பீகாரில் தற்போது நடக்கும் சட்டசபை தேர்தலில், கீழ் கண்ட பிரச்னைகளை மையமாக வைத்துத் தான், ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரசாரம் செய்து வருகின்றன.

1. ஜாதி
2. வளர்ச்சிப் பணிகள்
3. அயோத்தி வழக்கு தீர்ப்பு
4. அரசு திட்டங்களில் ஊழல்
5. மின்சார தட்டுப்பாடு
6. வேலைவாய்ப்பின்மை
7. கட்டமைப்பு பணிகளில் உள்ள குறைபாடு

கிரிமினல்களுக்கு  முன்னுரிமை : முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கிரிமினல் வழக்கு உள்ளவர்களையே, மீண்டும் களத்தில் இறக்கியுள்ளன. "நேஷனல் எலக்ஷன் வாட்ச்டாக்' என்ற அமைப்பு, வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தபோது, அளித்த அபிடவிட்டை ஆய்வு செய்து, அதன் முடிவை அறிவித்துள்ளது. இதில், முதல் மூன்று கட்ட தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் மட்டும், 379 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என, தெரியவந்துள்ளது. இது, ஒட்டு மொத்த வேட்பாளர்களில் 39 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.இந்த 379 பேரில், 231 மீது, மிக கொடிய குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கொலை, கொலை முயற்சி, கற்பழிப்பு, வழிப்பறி, திருட்டு ஆகியவை தொடர்பான வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

பீகாருக்கு "குட்பை' சொல்லும் மண்ணின் மைந்தர்கள் : நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, பீகாரில் வளர்ச்சி பணிகள் எதுவும் பெரிய அளவில் செயல்படுத்தப்படவில்லை, குறிப்பாக, மின்சாரம், சாலைவசதி போன்றவை இந்த மாநில மக்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளன. வேலை வாய்ப்பும் அப்படித் தான். எத்தனை நாளைக்குத் தான் ஒட்டிய வயிற்றுடன், வறுமையில்  வாடுவது என, நினைத்த மக்கள், பிழைப்பை தேடி, அண்டை மாநிலங்களுக்கு பெருமளவில் இடம் பெயரத் துவங்கி விட்டனர். அதிகபட்சமாக மேற்கு வங்கத்துக்கு 11 லட்சம் பேரும், டில்லிக்கு ஏழு லட்சம் பேரும், உ.பி.,க்கு ஆறு லட்சம் பேரும் இடம் பெயர்ந்து விட்டனர். மகாராஷ்டிராவில் 3.6 லட்சம் பேரும், அரியானா மற்றும் பஞ்சாபில் தலா 2.5 லட்சம் பேரும் வசிக்கின்றனர். இது, கடந்த 2001ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வெளியான தகவல். புள்ளி விவரத்திற்குள் வராத பீகார் மக்கள் எத்தனை லட்சம் பேர் என்பது கடவுக்குக்கு தான் வெளிச்சம்.

கடந்த தேர்தலில் 49  இந்த தேர்தலில் 41 : பீகார் சட்டசபை தேர்தலில் சில சுவராசியமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ., ஆனந்த் சிங், மொகமாஸ் தொகுதியில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தார். அதில் அவரின் வயதை 49 என, குறிப்பிட்டுள்ளார். கடந்த 2005ல் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் அவர் போட்டியிட்டார். அப்போது அவர் தனது வயதை 41 என, குறிப்பிட்டிருந்தார். கடந்த தேர்தலை விட, இந்த தேர்தலில் அவருக்கு எட்டு வயது குறைந்ததன் ரகசியம் என்ன, என்பது தான் யாருக்கும் தெரியாத புதிராக உள்ளது.இதேபோல், காந்தி தொகுதியில் போட்டியிடும் தற்போதைய எம்.எல்.ஏ.,  அஜித் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) கடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட,  மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த தேர்தலில் தனது வயதை 41 என, குறிப்பிட்டிருந்த அவர், இந்த தேர்தலிலும் 41 வயது என்று தான் குறிப்பிட்டள்ளார். இதைப் பார்த்து, எதிர்க்கட்சியினர்," ஐந்து ஆண்டு ஆகியும் வயது அதிகரிக்காததன் மார்க்கண்டேய ரகசியம் என்னவோ என, கிண்டலடித்து வருகின்றனர்.

சபாஷ்  நிதிஷ் குமார்...! பீகாரில் கடந்த ஐந்தாண்டுகளில் குறிப்பிடத் தக்க வகையில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. குற்றச் செயல்களும் இந்த ஐந்தாண்டில் கணிசமாக குறைந்துள்ளதை புள்ளி விவரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
* ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியில் (2000-05) மாநிலத்தில் 22 ஆயிரத்து 40 கொலைகள் நடந்துள்ளன. நிதிஷ் குமார் ஆட்சியில் (2006-10) கொலைகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 664 ஆக குறைந்துள்ளது.
*முந்தைய ஆட்சியில் 2,196 கற்பழிப்புகள் நடந்துள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 484 ஆக குறைந்துள்ளது.
*கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 53 ஆயிரத்து 600 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9,280 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 9,280 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
*இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆய்வின்படி, பீகாரில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் பீகாருக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலீடு வந்துள்ளது. அதேபோல், கட்டுமானத் துறையில் 36 சதவீத வளர்ச்சியும், தொலைத் தொடர்பு துறையில் 17 சதவீத வளர்ச்சியும், வர்த்தக துறையில் 17 சதவீத வளர்ச்சியும் எட்டப்பட்டுள்ளது.
*கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சி காரணமாக, இத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் கூலி, ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த 120 ரூபாயிலிருந்து, 200 ரூபாயாக அதிகரித்துள்ளது.கொத்தனார் கூலி 150 ரூபாயிலிருந்து, 250 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Comments