தேர்தலையொட்டி மாநில அரசியல் குறித்து முடிவெடுப்பேன்-அழகிரி அறிவிப்பு

சென்னை: சட்டசபைத் தேர்தல் வரட்டும். அப்போது நான் மாநில அரசியலுக்குத் திரும்புவது குறித்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.

தென் தமிழக திமுகவின் பெரும் புள்ளியும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடும் போட்டியாளராக கருதப்படுபவருமான மு.க.அழகிரி சட்டசபைத் தேர்தலையொட்டி மாநில அரசியலுக்குத் திரும்புவார் என பலமாக பேசப்படுகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் சட்டசபைத் தொகுதியில் அவர் போட்டியிடக் கூடும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி சென்றிருந்த அழகிரி நேற்று சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள், மாநில அரசியலுக்குத் திரும்புகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அழகிரி பதிலளிக்கையில், சட்டசபைத் தேர்தல் முதலில் வரட்டும். தேர்தல் வரும்போது மாநில அரசியலுக்குத் திரும்புவது குறித்து நான் யோசித்து முடிவெடுப்பேன் என்றார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து மத்திய அமைச்சர் ஏ.ராஜாவை திட்டியதாக ஒரு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது குறித்து கேட்ட கேள்விக்கு, இதெல்லாம் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பொய்யான செய்திகள். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்றார்.

மதுரை கூட்டத்தில் ஜெயலலிதா தெரிவித்த புகார்கள் குறித்து கேட்டபோது, அதுகுறித்து ஏற்கனவே விளக்கி விட்டேன். எனக்கு அவர் நல்ல விளம்பரம் கொடுத்து வருகிறார். யாரோ சிலர் அவருக்குத் தவறான தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அது உண்மையா, பொய்யா என்பதைக் கூட சோதித்துப் பார்க்காமல் அவரும் அறிக்கையாக வெளியிட்டும், பேசியும்
வருகிறார் என்றார் அழகிரி.

Comments