கார்கிலில் உயிர்நீத்த குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கீடு புகார்: அசோக்சவான் பதவியை உதறினார்

புதுடில்லி: மகாராஷ்ட்டிர முதல்வர் அசோக்சவான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். காங்., தலைவர் சோனியா ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அம்மாநிலத்தில் அடுத்து யாரை முதல்வர் நியமிப்பது என்ற முடிவு செய்யக்கூடும். அதே நேரத்தில் தம் மீது சுமத்தப்படும் குற்றம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணையை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். 

இந்த விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார் சவான். இந்த குற்றச்சாட்டிற்கு என் மீது களங்கம் கற்பிக்கப்படுகிறது. நான் இது போன்ற தவறு செய்யவில்லை என சோனியாவிடம் ஆதாரங்களை வழங்கியிருக்கிறேன் என்றார்.

கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர முடிவு செய்யப்பட்டது. இந்த வீடுகள் ( பிளாட் ) ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் சவானின்  உறவினர்கள் மற்றும் அவருக்கு வேண்டப்பட்டவர்களும் இதில் வீடுளை பெற்றிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பான விஷயம் குறித்து காங்., தலைவர் சோனியா விளக்கம் கேட்டிருந்தார். இவர் இன்று காலையில் சோனியாவை சந்தித்து பேசினார். பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோனியையும் சந்தித்து நிலைமை குறித்து விளக்கினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர் சவான், இது தொடர்பான விளக்கத்தை காங்., தலைவர் சோனியாவிடம் தெரிவித்தேன். மேலும் முதல்வர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக கடிதம் ஒன்றையும் சோனியாவிடம் கொடுத்திருக்கிறேன். இந்த பிரச்னை குறித்து சி.பி.ஐ., முழு அளவில் விசாரணை நடத்தட்டும் , இதன் பின்னர் உண்மை நிலை மக்களுக்கு தெரியும்  இனி அவரே இறுதி முடிவு எடுக்கட்டும் என்றார்.

நேற்றைய பேட்டியில் அசோக் சவான் கூறியதாவது :  எனது குடும்பத்தினர் யாருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு இல்லை என்றார்.  ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் அடுக்குமாடி கட்டி உள்ள கொலபாவில் உள்ள இடம் மாநில அரசுக்கு சொந்தமான இடம். எனவே ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் யார் வேண்டு மானாலும் உறுப்பினராக சேரலாம் என்றார். வீட்டு வசதி திட்ட முறைகேடுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என் கூறினார் சவான். 
இதனையடுத்து காங்., உயர் மட்ட தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க காங்.,மூத்த அமைச்சர்கள் அந்தோனி , பிரணாப் முகர்ஜி ஆகியோரை கொண்ட குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் அசோக்சவானை சோனியாவே ராஜினாமா செய்ய வற்புறுத்தியிருப்பார் என கூறப்படுகிறது.

முதல்வர் சவான் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி., சவானின் மகன் ஆவார்‌. கடந்த 2008 டிசம்பர் மாதம் இவர் முதல்வரானார்.

ஒபாமா வருகை நேரத்தில் சலசலப்பு : அமெரிக் அதிபர் ஒபாமா இந்தியா வரும் நேரத்திலல் மகாராஷட்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையை எப்படிக்‌கையாள்வது என காங்., நெருக்கடியில் சிக்கியுள்ளது.  ஒபாமா மும்பையில் தங்குவதால் இந்த மாநிலத்தின் அரசியல் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண காங்.,மூத்த தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments