நியூசிலாந்துக்கான டெஸ்ட் அணி அறிவிப்பு-மீண்டும் கம்பீர் சேர்ப்பு

டெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கெளதம் கம்பீர், வி.வி.எஸ்.லட்சுமண், இஷாந்த் சர்மா ஆகியோருக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக இவர்கள் ஆடவில்லை.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 4ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் அரை சதம் அடித்த யுவராஜ் சிங்குக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேசமயம் சுரேஷ் ரெய்னா, சட்டேஷ்வர் புஜாரா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

ஜாகிர்கான், ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா ஆகிய 3 வேகப் பந்து வீச்சாளர்களும், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை சச்சின்  , ராகுல் டிராவிட், லட்சுமண், வீரேந்தர் ஷேவாக் ஆகியோர் தூண்களாக இருப்பார்கள்.

கம்பீரும் இவர்களுடன் இணைகிறார். அணியில் முரளி விஜய் இருந்தாலும் கம்பீர் வந்திருப்பதால், முரளி விஜய்க்கு ஆடும் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நவம்பர் 12ம் தேதி ஹைதராபாத்திலும், மூன்றாவது போட்டி நாக்பூரில் நவம்பர் 20ம் தேதியும் தொடங்குகிறது.

இதையடுத்து ஐந்து ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடர் குவஹாத்தி, ஜெய்ப்பூர், வததோரா, பெங்களூர்  , சென்னையில் நடைபெறுகிறது.

அணி விவரம்- டோணி (கேப்டன்), ஷேவாக் (துணை கேப்டன்), கம்பீர், முரளி விஜய், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், சுரேஷ் ரெய்னா, சட்டேஷ்வர் புஜாரா, ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா.

Comments