மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் : கே.ஆர்.எஸ்., அணையில் திறந்த உபரி நீர்,  காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமானதை தொடர்ந்து, அக்., 17ல் முழு கொள்ளளவை எட்டிய, கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, நேற்று  வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி உபரி நீர், காவிரியில் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு இன்று அதிகாலை, உபரி நீர் வந்து சேர்ந்தது. அதனால், நேற்று  வினாடிக்கு 7,230 கனஅடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, இன்று காலை 20 ஆயிரம் கன அடியாகவும்,  இன்று மாலை 26 ஆயிரத்து 68 கனஅடியாகவும் அதிகரித்தது.கூடுதல் நீர்வரத்து காரணமாக, நேற்று  60.610 அடியாக இருந்த மேட்டூர் அணை மட்டம், இன்று மாலை 63.110 அடியாகவும், 25.062 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, இன்று 27.058 டி.எம்.சி.,யாகவும் அதிகரித்தது. நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால், நேற்று   21 ஆயிரத்து 47 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து, இன்று 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.அணையில் இருந்து வினாடிக்கு 6,180 கனஅடி நீர் மட்டுமே மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. அதனால், மேட்டூர் அணை நீர்வரத்து, நாளை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து, இரு நாட்களாக வினாடிக்கு 3,000  கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Comments