பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் இருந்து தனது கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கர்நாடகத்தில் தங்களது கட்சி எம்.எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி வருவதைத் தடுக்க, அனைத்து எம்எல்ஏக்களையும் கூண்டோடு ராஜினாமா செய்ய வைக்க காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் திட்டமிட்டுள்ளன. இதன்மூலம் பாஜக அரசுக்கு அரசியல் சட்ட சிக்கலை ஏற்படுத்த அந்த் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கர்நாடகாவில் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 16 பாஜக எம்.எல்.ஏக்களும் 5 சுயேச்சைகளும் வாபஸ் பெற்றதையடுத்து அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து சட்டசபையில் ஒர் வாரத்தில் இரு முறை மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு முதல்வர் எதியூரப்பா தள்ளப்பட்டார்.
அதிருப்தி எம்எல்ஏக்களை கூண்டோடு பதவி நீக்கம் செய்து தனது மெஜாரிட்டியை எதியூரப்பா நிரூபித்தார்.
ஆனாலும் அவருக்கு இன்னும் நெருக்கடி தீரவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்ட பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் அதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த எம்எல்ஏக்களின் பதவி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டால் முதல்வர் எதியூரப்பா அரசு கவிழும் ஆபத்து உள்ளது.
இதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் “ஆபரேஷன் தாமரை” திட்டத்தை பாஜக மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. இதுவரை 2 காங்கிரஸ், ஒரு மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். மேலும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கட்சித் தாவ தயாராக உள்ளனர். இதன்மூலம் எதிர்க் கட்சிகளால் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய முடியாத நிலை உருவாகும் என்று தெரிகிறது. இதற்காக காங்கிரஸ், ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு ரூ. 25 கோடி வரை பாஜக பணம் தந்து வருவதாக அந்தக் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இன்னும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 எம்.எல்.ஏக்கள் வரை இழுக்க பாஜக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதையடுதது பாஜகவுக்கு பதிலடி தரும் வகையில் அதிரடி நடவடிக்கைக்கு காங்கிரஸ் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
எதியூரப்பா அரசுக்கு அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய வைக்க அக் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
இது குறித்து இறுதி முடிவெடுக்க இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டப்பட்டுள்ளது.
ஆனால் ராஜினாமா செய்ய பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது.
அதே போல மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமியும் ஏற்கனவே தனது கட்சியின் அனைத்து 27 எம்.எல்.ஏக்களுமே ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் ராஜினாமா முடிவை எடுத்தால் உடனே ஜனதா தளம் கட்சியும் கூண்டோடு தனது கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கும் என்று தெரிகிறது.
இதன் மூலம் பாஜக அரசுக்கு அரசியல் சட்டரீதியில் கடும் நெருக்கடி எழலாம்.
கர்நாடக சட்டசபையில் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் போக மிச்சம் 204 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. 16 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செல்லாது என்று தீர்ப்புவ வந்தால் சட்டசபை எம்எல்ஏக்கள் பலம் 220 ஆகி விடும். அப்போது மெஜாரிட்டியை நிரூபிக்க பாஜகவுக்கு 111 பேர் தேவை. இதற்கு இன்னும் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படும்.
இதனால் தான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறைத்து எளிதாக மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ள பாஜக தனது ஆபரேஷன் லோட்டஸை தீவிரமாக்கியுள்ளது.
ஆனால், இதை முறியடிக்கவே கூண்டோடு ராஜினாமா என்ற முடிவுக்கு எதிர்க் கட்சிகள் வந்துள்ளன. காங்கிரஸ், ஜனதா தளத்தின் இந்த முடிவால் பாஜக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
தேர்தலை திணிக்க காங்கிரஸ் சதி-எதியூரப்பா:
இந் நிலையில் முதல்வர் எதியூரப்பா அளித்துள்ள பேட்டியில்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசைக் கவிழ்க்க கெளடா கட்சியினருடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு இது அழகல்ல.
அரசை கவிழ்க்க கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் நடத்தும் சதி குறித்து ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் , அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் புகார் செய்வேன்.
25 ஆண்டு காலம் நான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்துள்ளேன். ஆனால், நான் எந்த நேரத்திலும் அரசை கவிழ்க்க முயற்சித்ததில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் 60 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளனர். அவர்களால் இரண்டரை ஆண்டு காலம் கூட எதிர்க்கட்சி வரிசையில் இருக்க முடியவில்லை. அவர்களுக்கு அதிகார தாகம் ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கர்நாடகத்தில் தேர்தலைத் திணிக்க காரணமாகி விடக் கூடாது.
ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர். பொம்மை, வீரேந்திர பட்டீல், ஜே.எச். பாட்டீல் ஆகியோரின் அரசுகளை கவிழ்க்க தேவ கெளடா சதி செய்தார். இதேபோல எனது அரசை கவிழ்க்கவும் சதி செய்து வருகிறார். அரசை கவிழ்க்க முயற்சிக்கும் கெளடாவுக்கும் அவரது மகன்களுக்கு மக்கள் புத்தி புகட்டுவார்கள்.
இன்னும் இரண்டரை ஆண்டு காலம் அரசை நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என்றார்.
Comments