சிமென்ட், செங்கல் விலை உயர்வு : நலவாரிய தலைவர் ஆதங்கம்

திருச்சி : ''தேர்தல் நெருங்குவதால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிமென்ட், செங்கல் விலையை உயர்த்தியுள்ளனர்,'' என தமிழக கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: தொழிலாளர் நலவாரியம் அமைத்து செயல்படுத்தும், முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்க, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வரும் 30ம் தேதி மாநாடு நடத்தப்படுகிறது. இதில், 50 ஆயிரம் தொழிலாளர்கள் வரை பங்கேற்பர். உயர் பயிலகம் மூலம் கட்டுமானத் தொழில் குறித்து ஆண்டுக்கு ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு பயிற்சியளித்து சான்று வழங்கப்படுகிறது.
இந்த சான்று இருந்தால் தான் எதிர்காலத்தில் பெரிய நிறுவனத்திலும் வேலை பார்க்க முடியும். வெளிநாடு செல்லவும் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் ஐந்தாண்டுக்கு கட்டுமான தொழிலில் வேலையின்மை பிரச்னை இருக்காது. சென்னை மாநாட்டில், பெண்களுக்கான ஓய்வூதிய வயதை 60ல் இருந்து 55 ஆக குறைக்கவும், விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் எங்கு இறந்தாலும் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், பென்ஷன் மற்றும் இறப்பு நிதி உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்க உள்ளோம்.

மின்கட்டணம், டீசல் விலை, புதிய வரி விதிப்பு என எதுவும் உயராத போது, எந்த முகாந்திரமும் இல்லாமல் சிமென்ட், செங்கல் விலை மட்டும் வானளாவ உயர்ந்துள்ளது. சிமென்ட், செங்கல் ஆலை அதிபர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், தேர்தல் நெருங்குவதால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் விலையை உயர்த்தியுள்ளனர். 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என்ற நிலை, மக்கள் மத்தியில் பேச்சு எழ வேண்டும் என அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியுள்ளனர். குறைந்த விலையில் செங்கல், போதிய அளவு சிமென்ட் கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த சிமென்ட் ஆலைகளை நாட்டுடமையாக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து சிமென்ட் இறக்குமதி செய்ய வேண்டும். இவ்வாறு பொன்குமார் கூறினார்.

Comments