கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 11 பேரும், ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் வாபஸ் பெற்றனர். இதனால், கவர்னர் பரத்வாஜ் உத்தரவு படி, சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் அதை ஏற்கவில்லை. இதனால், மீண்டும் ஒரு முறை கவர்னரின் வேண்டுகோளின்படி, பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது.இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் பா.ஜ., இறங்கியது. "ஆபரேஷன் தாமரை-2' என்ற இந்த திட்டப்படி, இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், ஒரு ம.ஜ.த., எம்.எல்.ஏ.,வும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்; மேலும் பலர் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர்.பா.ஜ.,வில் சேருவதற்காக 25 கோடி ரூபாய் வரை கொடுப்பதாக, அக்கட்சி எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா மொபைலில் பேசிய தகவல்களை மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியிட்டது. இவ்விஷயத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில், நேற்று காலையிலிருந்தே பா.ஜ.,வைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது. "ஆபரேஷன் தாமரை'க்கு பெரிதும் உதவி வரும் ரெட்டி சகோதரர்களை குறி வைத்தே, இந்த ரெய்டு நடத்தப்பட்டது. கர்நாடகாவின் 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதாவது, பெங்களூரு, பெல்லாரி, ஹொஸ்பேட், நஞ்சன்கூடு உட்பட பல இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.முதற்கட்டமாக பெல்லாரியை வருமான வரித்துறை அதிகாரிகள் குறி வைத்தனர். நேற்று முன்தினம் இரவே அங்கு முகாமிட்டனர். இதற்காக 40 வாகனங்களில் அவர்கள் சென்றனர். டில்லி, மும்பை, பெங்களூரு பகுதிகளிலிருந்து வந்த அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.
அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும், அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமானவராக விளங்கும் குட்லிகி எம்.எல்.ஏ., நாகேந்திராவின், குட்லிகி சுரங்க நிறுவன அலுவலகம், வீடுகள், பெல்லாரி நேரு காலனியிலுள்ள வீடு, பெங்களூரு வயாலிகாவலில் உள்ள சுரேஷ் கன்ஸ்டிரக்ஷன் அலுவலகம், ஹொஸ்பேட்டையிலுள்ள அலுவலகம், அமைச்சர் ஸ்ரீராமுலுவின் சகோதரி மகன் கம்பிளி எம்.எல்.ஏ., சுரேஷ் பாபுவின் கம்பிளி வீடு, நேரு காலனி வீடு, அலுவலகம், பசவனகுண்டே வீடு, அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் பி.ஏ.,வும், வக்கீலுமான அலிகானின் பெல்லாரி வீடு, அலுவலகங்கள், ஜனார்த்தன ரெட்டி வக்கீல் ராகவாச்சார்யலு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ரெட்டிக்கு நெருக்கமாக விளங்கும் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெல்லாரியிலுள்ள கட்டுமானக் கம்பெனியின் அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடந்தது. ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமான "ஸ்வஸ்திக்' நாகராஜ், கரதபுடி மகேஷ், ஜி.ஜி. மைன்ஸ், ஐ.எல்.சி., கம்பெனி உரிமையாளர் சோமசேகர், பெல்லாரியிலுள்ள கொக்க சித்தராமையா, ஹொஸ்பேட்டை சீல்டு நிறுவனத்தின் ஜம்பண்ணா ஆகியோர் வீடு, அலுவலகங்களும் சோதனையிலிருந்து தப்பவில்லை.
முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமான சித்தலிங்கசாமியின் நஞ்சன்கூடு வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு முன்னதாகவே இச்சோதனை துவங்கியது. எவ்வித தகவலும் அளிக்காமல், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென நடவடிக்கையில் இறங்கி, ஏராளமான பணம் மற்றும் தஸ்தாவேஜுகளை கைப்பற்றியிருப்பது, சுரங்க அதிபர்களை திக்குமுக்காட வைத்துள்ளது; அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியிருப்பதால், காங்கிரஸ் தலைவர்களின் தூண்டுதலின் பேரிலேயே இது நடைபெற்றிருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.
பா.ஜ., கண்டனம்: பா.ஜ.,வின், கர்நாடகாவின் வளர்ச்சியை சகிக்காத வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது, காங்கிரசின் செயலே என்று பா.ஜ.,வின் மக்கள் தொடர்பாளர் தனஞ்செயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பா.ஜ., அரசை சீர்குலைக்க சதி முதல்வர் எடியூரப்பா புகார் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:கர்நாடக பா.ஜ., அரசை நிலைகுலையச் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் சதி செய்து வருகின்றன. அவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பர். அதற்காகவே பா.ஜ.,வினர் மீது வருமான வரித்துறை ரெய்டை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் நடக்கவுள்ள ஜில்லா பஞ்சாயத்து, ஊராட்சி தேர்தலில் எங்களின் பலத்தைக் காட்டுவோம் என்றார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுகையில், ""பா.ஜ., அமைச்சர்கள் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறு செய்யவில்லை என்றால், பா.ஜ.,வினர் ஏன் பயப்பட வேண்டும். முதல்வர் எடியூரப்பாவின் சொத்துகளையும் சேர்த்து சோதனையிட வேண்டும். என் சொத்து விவரத்தை சோதனையிட தயாராக இருக்கிறேன்,'' என்றார்.
Comments