தி.மு.க., நகரச் செயலர் ஓட ஓட விரட்டி படுகொலை : ஆறு பேர் கும்பல் வெறிச்செயலால் ஆலங்குடியில் பரபரப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், தி.மு.க., நகரச் செயலரை ஆறு பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த, புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்தவர் வீரய்யா மகன், தி.மு.க., நகர செயலர் மணிமாறன்(39). இவருக்கு, அமுதா(35) என்ற மனைவி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர்.  ஆலங்குடியில் இவர், "மூவேந்தர் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததோடு, கான்ட்ராக்ட் வேலைகளையும் பார்த்து வந்தார். வழக்கம்போல், நேற்று காலை 7 மணிக்கு, ஹீரோ ஹோண்டாவில் ஆலங்குடி ஜங்ஷன் வந்த மணிமாறன், தன் உறவினர்கள் தங்கமணி, சத்தியமூர்த்தி ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு டூவீலரில் அரிவாள், பட்டாக்கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், மணிமாறனை தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல மணிமாறன் முயன்றும், அவரை துரத்திச் சென்ற கும்பல், அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் வெட்டிச் சாய்த்து தப்பியது. வலது கை மணிக்கட்டு, தாடை எலும்பு துண்டான நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மணிமாறனை, அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாலை 3 மணிக்கு அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தகவலறிந்த மணிமாறன் உறவினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.,வினர் பெரும்பாலானோர், அரசு மருத்துவமனையில் குவிந்ததால், மருத்துவமனை வளாகம் பரபரப்புக்கு உள்ளானது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆலங்குடியில் நேற்று காலை முதல், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. திருச்சி ஐ.ஜி., கரண் சின்ஹா, டி.ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பழிக்குப் பழியாக நடந்த கொலையா? : கொலை  தொடர்பாக ஆலங்குடி அடுத்த புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (28), ஹலிபுல்லா நகரை சேர்ந்த அப்பாஸ்(30) ஆகியோர், நேற்று மாலை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  இவர்களில் ஜெயராஜ், ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட அ.தி.மு.க., கிளைச் செயலர் வெற்றிவேலின் தம்பி என்பதும், அப்பாஸ் அவரது நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி ஹேமானந்த குமார் உத்தரவிட்டார். நிலத்தகராறு தொடர்பான முன்விரோதத்தில், அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., கிளைச் செயலர் வெற்றிவேல்(32),  கடந்த ஜூலை 24ம் தேதி, ஆலங்குடி டாஸ்மாக் பாரில் படுகொலை செய்யப்பட்டார். இதில், தொடர்புடைய ரமேஷ், திருநாவுக்கரசு, மணிமுருகன் ஆகியோரை கைது செய்த ஆலங்குடி போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  இவர்களில் ரமேஷ் என்பவர், தி.மு.க., நகரச் செயலர் மணிமாறனின் மைத்துனர் என்பதால், கொலையாளிகளுக்கு அவர் உதவியுள்ளார்.   வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாகத்தான், மணிமாறன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments