கொடநாடு வழக்கு-அவகாசம் கேட்க ஜெ தரப்புக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

டெல்லி: கொடநாடு பாதை தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மீண்டும் அவகாசம் ஜெயலலிதா தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் வழியே சென்று வர கிராம மக்களுக்கு வழி விடுவது தொடர்பான அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் முகந்தகன் சர்மா, அனில் தவே ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் ஒருவார காலம் அவகாசம் கேட்டார். இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த தரப்பினருக்கு ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டது. மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் அது வழங்கப்பட்டது. இப்போதும் ஒரு வார அவகாசம் கேட்பது சரியல்ல. என்றாலும், மீண்டும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. இனி அவகாசமே கேட்கக்கூடாது என்று நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Comments