டில்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: எல்லையில், சமீபகாலமாக ஊடுருவல் அதிகரித்துள்ளது. இந்தியாவுக்குள் ஊடுருவ, 600க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகேயும், சர்வதேச எல்லை அருகேயும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவுக்கு எதிரான மறைமுகப் போருக்காக, பாகிஸ்தான் பெருமளவு முதலீடு செய்துள்ளது. பயங்கரவாத முகாம்களை அழிக்க, பாக்., அரசு எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், புதிதாக தோன்றிய ஒன்று உட்பட, 42 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் தற்போது செயல்படுகின்றன. அங்கு, பெண்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
காஷ்மீரில், கடந்த சில மாதங்களாக நிலவும் வன்முறைகளுக்கு, எல்லைக்கு அப்பால் இருந்து வரும் தூண்டுதல்களே காரணம். கடந்த 15 முதல் 20 நாட்களில், 20 முதல் 25 முறை ஊடுருவல் முயற்சிகள் நடந்து, அவை முறியடிக்கப்பட்டுள்ளன. அப்போது நடந்த சண்டையில், 12 முதல் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் ஊடுருவல்களை முறியடிக்க, ராணுவத்தினர் ஒரு சிறப்பான செயல்திட்டத்தை பின்பற்றுகின்றனர்; அது நல்ல பலன் தருகிறது. இவ்வாறு வி.கே.சிங் கூறினார்.
Comments