ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்டம்-3 பாக். வீரர்களின் சஸ்பெண்ட்டை உறுதி-அப்பீல் மனுக்கள் நிராகரிப்பு

துபாய்: ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 பாகிஸ்தான் வீரர்களும் தாத்கல் செய்திருந்த அப்பீலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு கமிஷனர் நிராகரித்து விட்டார். மேலும் 3 பேருக்கும் விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையயும் அவர் உறுதி செய்து உத்தரவிட்டார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பெரும் குற்றச்சாட்டுக்குள்ளானது. இதையடுத்து நடந்த விசாரணையில் கேப்ன் சல்மான் பட், பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆமிர், முகம்மது ஆசிப் ஆகியோரை ஐசிசி சஸ்பெண்ட் செய்தது.

இதை எதிர்த்து மூன்று பேரும் அப்பீல் செய்தனர். ஆனால் ஆசிப் திடீரென தனது அப்பீல் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார். இதையடுத்து மற்ற இருவரின் அப்பீல் மனுக்களையும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆணையர் மைக்கேல் பிளாஃப் விசாரித்தார். விசாரணையின் இறுதியில், அப்பீல் மனுக்களை அவர் நிராகரித்து உத்தரவிட்டார்.

இரண்டு நாள் நடந்த விசாரணைக்குப் பின்னர் தனது முடிவை அவர் அறிவித்தார். இதுகுறித்து பிளாஃப் கூறுகையில், சல்மான் பட் மற்றும் முகம்மது ஆமிர் ஆகியோர் தங்களது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் தீவிரமாக சீர் தூக்கிப் பார்த்த பின்னர் இருவரது அப்பீல்களையும் நிராகரித்து உத்தரவிடுகிறேன். அவர்கள் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை தொடரும் என்றார்.

அடுத்து இரு வீரர்களும் நடத்தை விதி மீறலுக்கான கமிஷன் முன்பு ஆஜராக வேண்டும். அங்கு நடத்தப்படும் விசாரணையின் இறுதியில் சஸ்பெண்ட் உத்தரவு ரத்தாகுமா, இல்லையா என்பது தெரிய வரும்.

Comments