சத்யம் ஊழல்-ராமலிங்க ராஜுவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து; நவ 10-க்குள் சரணடைய உத்தரவு!

டெல்லி: சத்யம் நிறுவன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த சத்யம் நிறுவனத்தின் நிறுவனர் ராமலிங்க ராஜுவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திர உயர்நீதிமன்றம் ராஜுவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிபிஐ உச்சநீதிமன்றத்தை நாடி, ராஜுவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரியிருந்தது.

ராஜூ தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்க நிறைய சாத்தியக் கூறுகள் உள்ளதாக சிபிஐ தெரிவித்திருந்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏன் உங்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கூடாது? என்று கேட்டு ராஜுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் இன்று இந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், "ராமலிங்க ராஜு ஜாமீனில் இருந்தால் சாட்சிகளைக் கலைப்பது சாத்தியமே. எனவே நவம்பர் 10-ம் தேதிக்குள் ராஜூவும் அவருடன் விடுதலையான ராமராஜூ, வத்லாமணி உள்ளிட்ட மேலும் 5 முக்கிய குற்றவாளிகளும் சரணடைய வேண்டும்.

மேலும் விசாரணை நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 11, 2011-ம் தேதிக்குள் கண்டிப்பாக முடித்து தீர்ப்பளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

Comments