மார்ச் 10ல் 949, மார்ச் 31ல் 1,64,253 பேர்.. அமெரிக்காவில் ஒரே நாளில் 20000 பேருக்கு கொரோனா பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக சுமார் 20000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதுவரை உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவாக 1,64,253 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவரையில் அமெரிக்காவில் எங்குமே லாக்டவுன் செய்யப்படவில்லை. ஆனால் மக்களிடையே சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் சுமார் 20000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 164253 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3165 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5506 பேர் இதுவரை பூரண குணமடைந்துள்ளனர். மார்ச் 10ம் தேதி 949 பேருக்கு கொரோனா இருந்த நிலையில் மார்ச் 31ம் தேதி 164253 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மாகாணங்களிலேயே மிக அதிகபட்சமாக நியூயார்க்கில் 67325 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1342 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக நியூஜெர்சி மாகாணத்தில் 16636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 198 பேர் இறந்துள்ளனர் கலிபோர்னியாவில் 7413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 146 பேர் இறந்துள்ளனர். மிசிகன் மாகாணத்தில் 6498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 184 பேர் இறந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் மக்கள் இறக்க நேரிடலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் 37815 பேர் இறந்துள்ளனர். 7,85,777 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் 11,500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள். அடுத்த இடத்தில் ஸ்பெயின் உள்ளது. அங்கு 7,700க்கும் அதிகமானோர் இறந்துள்ளார்கள்.
Comments