சென்னை: பேரூராட்சி நகராட்சியை தவிர்த்து, 15 மாநகராட்சிகளுக்கு தனியாகவும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக 27 மாவட்டங்களில் மட்டும் நடைபெற உள்ளது. 9 மாவட்டங்களில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே முதல்கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது.
மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டு தொடர்பாக தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. அந்த ஆணைப்படி திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 7 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி எஸ்சி பிரிவினருக்கும், வேலூர் மாநகராட்சி எஸ்சி பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஆவடி, ஓசூர், தஞ்சை, சேலம், கோவை ஆகிய மாநகராட்சிகளில் மேயர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊரகப்பகுதிகள் தவிர்த்து பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது தொடர்பாக விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்நிலையில் பேருராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தனியாகவும், 15 மாநகராட்சிக்கு தனியாகவும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேருராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு மாநகராட்சிகளுக்கான தேர்தலை அறிவித்து , மே மாதம் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஊரகப்பகுதி தேர்தலில் வெற்றி தோல்வி ஆளும் அதிமுகயையோ மற்ற திமுக உள்ளிட்ட கட்சிகளையோ பாதிக்காது. ஏனெனில் கட்சி சார்பான வேட்பாளர்கள் உள்ளாட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் களம் இறங்க முடியாது. வார்டு வாரியாக மட்டுமே இறங்க முடியும். ஆனால் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அனைத்து பதவிகளும் கட்சி அடிப்படையில் பங்கேற்பார்கள் என்பதால் பாதிப்பு ஏற்படும்.
எனவே பேரூராட்சி, நகராட்சிக்கு தனியாகவும், மாநகராட்சிக்கு தனியாகவும் தேர்தல் நடத்தினால், தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுவதால் அப்படி தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாம்.
Comments