என்சிபியின் நிபந்தனையை ஏற்றது சிவசேனா.. மோடி அமைச்சரவையில் இருந்து வெளியேறியது

முதல்வர் பதவி டெல்லி: மோடியின் கேபினட்டில் இருந்து உங்கள் அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி விதித்த நிபந்தனையை சிவசேனா ஏற்றுக்கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு தருவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று தேசியாத காங்கிரஸ் கட்சி நிபந்தனையாக விதித்தது. மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. ஆனால் இன்னும் யாரும் அங்கு ஆட்சியமைக்க முடியவில்லை. பாஜகவுக்கு பெரும்பான்மை இடமான 145 இடங்கள் கிடைக்கவில்லை. 105 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அதேநேரம் அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவு 56 இடங்களில் வென்றுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும் எனில் தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என சிவசேனா நிபந்தனை விதித்தது. ஆனால் இந்த நிபந்தனையை ஏற்க பாஜக முன்வரவில்லை.

இதன் காரணமாக இதுவரை பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை. இதனால் ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்த அழைப்பை பாஜக நிராகரித்துள்ளது. தங்களால் ஆட்சியமைக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு சிவசேனாவுக்கு ஆளுநர் பகத் சிங் கேஷாரி நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.. இதையடுத்து சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸை அணுக முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த சூழ்நிலைலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா முதலில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருந்து அதன் அமைச்சர் அரவிந்த் ஷாவை (கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சர்) பதவி விலக செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. அப்படி செய்தால் ஆதரவு அளிப்பது பற்றி பரிசீலிப்பதாக கூறியது.

இதையடுதது சிவசேனா கட்சி என்சிபியின் நிபந்தனையை ஏற்று தங்கள் அமைச்சரை ராஜினாமாசெய்ய வலியுறுத்தி உள்ளது. இதன்படி அமைச்சர் அரவிந்த் ஷாவும் இன்றே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் அரசாங்கத்திற்கு காங்கிரஸ் வெளிப்புற ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் என்சிபி தலைவர் சரத்பவார் இன்று சோனியா காந்தியை சென்று சந்திக்க உள்ளதால் அது தொடர்பானஅறிவிப்புகள் வெளியாக வாய்ப்பும் இருக்கிறது.

Comments