மும்பை: எங்களை ஏமாற்றி ஆளுநர் மாளிகைக்கு அஜித் பவார் அழைத்து சென்றுவிட்டதாக என்சிபி எம்எல்ஏ ராஜேந்திர ஷின்கானே பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் இன்று காலை நடந்த திடீர் திருப்பத்தை அடுத்து என்சிபி தலைவர் சரத்பவாரும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அந்த கூட்டத்தில் பேசிய சரத்பவார், எம்எல்ஏக்களை அஜித்பவார் ஏமாற்றி அழைத்து சென்றுவிட்டதாகவும் அதில் சிலர் திரும்பி எங்களிடம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். அவ்வாறு அஜித் பவாரிடம் இருந்து வந்த என்சிபி எம்எல்ஏ ராஜேந்திர ஷின்கானே கூறுகையில், என்னுடன் ஏதோ பேச வேண்டும் என அழைத்தார் அஜித் பவார். பின்னர்தான் எங்களை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு அழைத்து சென்றுவிட்டார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட நான் பதவியேற்பு விழா முடிவதற்குள்ளாகவே சரத்பவாரிடம் திரும்ப வந்துவிட்டேன் என்றார். அது போல் மேலும் சந்தீப் சிர்சாகர் மற்றும் சுனில் புசாரா ஆகிய இரு எம்எல்ஏக்களும் சரத்பவாரிடம் திரும்பி வந்துவிட்டனர்.
Comments