சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதிக்காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரத்தில் மட்டும் 2 ஐ.ஜி, 4 டி.ஐ.ஜி, 15 ஏ.எஸ்.பி-க்கள் என மொத்தம் 7,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - சீனா இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மாமல்லபுரத்திற்கு வரலாற்று ரீதியாக சிறப்பான இடம் உண்டு. இதைக் கணக்கில் கொண்டு, இரு நாட்டுத் தலைவர்களும் சந்திக்கும் இடமாக மாமல்லபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தச் சந்திப்பை, உலகமே எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
இன்று காலை 5 மணிக்கு 1.6 ஆயிரமாக இருந்த #GoBackModi ஹேஷ்டேக் 8 மணியளவில் 15.5 ஆயிரமாக இருந்தது. 10 மணியளவில் 20.6 ஆயிரத்தை தொட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 1.08 லட்சம் ஹேஷ்டேக் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகளை இந்தியாவில் 8.7 கோடி பேர் பார்த்துள்ளனர்.
அதேபோல் தமிழ் மொழியில் மட்டும் கிட்டத்தட்ட 33.2 ஆயிரம் #GoBackModi ஹேஷ்டேக் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.
இந்தப் பதிவுகள் 2.9 கோடி பேரைச் சென்றடைந்துள்ளது.
அதேபோல், #TN_welcomes_XiJinping என்ற ஹேஷ்டேக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 31.5 ஆயிரம் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. இவை 13.24 கோடி பேரைச் சென்றடைந்துள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல்முதலாகப் பதிவிடப்பட்ட #GoBackModi ஹேஷ்டேக், பிரதமர் மோடியை எதிர்த்து, அவர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் தமிழகத்திலிருந்து, உலகளவிலும், தேசிய அளவிலும் டிரெண்ட் ஆகி வருகிறது. GoBackModi ஹேஷ்டேக் போலவே, ஒவ்வொரு முறையும் பா.ஜ.க தொண்டர்கள் #TNWelcomesModi என்று பதில் ட்வீட்களையும் பதிந்துவருகின்றனர். பா.ஜ.கவினரின் இந்த ஹேஷ்டேக் #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்டிங்கை இதுவரை முந்தியதே இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 28.8 ஆயிரம் பதிவுகள் இந்த ஹேஷ்டேக்குடன் பதிவாகியிருக்கின்றன.


Comments