சென்னை:சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பின், கட்சியின் கட்டமைப்பில் மாறுதலை ஏற்படுத்த விரும்பிய கட்சி செயல் தலைவர் ஸ்டாலின், குழுக்களை அனுப்பி கள ஆய்வு செய்து வந்து அறிக்கைக் கொடுக்க உத்தரவிட்டார்.தமிழகம் முழுவதும் சுற்றிய ஆய்வுக் குழுவினர், கள தகவல்களை அறிக்கையாக கட்சி மேலிடத்துக்கு சமர்ப்பித்தனர்.
சில நாளில் மாற்றம்:
அதன்படி, இரண்டொரு நாட்களில் கட்சி கட்டமைப்பில் மாறுதல்களை கொண்டு வர, ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இனி தி.மு.க.,வில் 65 மாவட்டங்கள் இருக்காது. 45 மாவட்டங்களாக குறைக்கப்படலாம். பல்வேறு மாவட்டச் செயலர்கள், பொறுப்பை இழப்பதோடு, புதிதாக பல மாவட்டங்களுக்கு செயலர்கள் நியமிக்கப்படவிருக்கின்றனர். 162 மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது கடுமையான புகார்கள் இருப்பதால், அவர்கள் அவ்வளவு பேரையும் மாற்றி விட ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சிலரை பொறுப்பில் இருந்து நீக்குவதோடு, பலரை கட்சியில் இருந்து நீக்கி விடலாம் எனவும் ஸ்டாலின் முடிவெடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கட்சியை விட்டு நீக்கும் முடிவை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
ரஜினியிடம் செல்வோம்:
இதற்கிடையில், நடவடிக்கை ஆளாவோம் என்று அஞ்சும் திமுக நிர்வாகிகள், ரஜினி கட்சிக்கு சென்று விடுவோம் என்று மிரட்டத் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
Comments