சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று 65வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதனையடுத்து அவர், அண்ணாத்துரை மற்றும் ஈ.வே.ரா., சமாதிகளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, குலாம்நபி ஆசாத், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல், நடிகர் ரஜினி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். அண்ணா அறிவாலயத்தில் கூடிய ஏராளமான திமுக தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக அவர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: 50 ஆண்டு பொது வாழ்வில் நிறைவேறாத ஆசை ஏதும் இல்லை. திராவிட கொள்கை பிரசாரமே என் பிறந்த நாள் பரிசு. மத்திய, மாநில அரசுகளை அகற்ற அனைவரும் ஜாதி, மத, கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும். மக்களிடம் சுயமரியாதை, சமூக நீதி,இனம் மொழி, உணர்வு மேலோங்க திமுகவினர் பாடுபட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் திமுகவினர் படிப்பகங்களை துவக்கி அண்ணாத்துரை,ஈ.வே.ரா., கருணாநிதி, அன்பழகன் ஆகியோரது பெயர்களை சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கமல் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வெளியிட்ட வாழ்த்து செய்தி: அன்புச் சகோதரர் , திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments