சென்னை : காவல்துறையினரின் உதவியுடன் பணப்பட்டுவாடா நடக்கும் நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி திமுகவினர் காவல்நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யும் பணி இறுதிக்கட்டமாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும 4 நாட்களே உள்ள நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் பலரின் வீடுகளில் கட்டுக்கட்டாக பணத்தை மறைத்து வைத்திருப்பதாக திமுகவினர் நேரில் அவர்களே களத்தில் குதித்து வீடுவீடாக சென்று பணம் பதுக்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தி வருகின்றனர்.
இதனால் ஆர்கே நகர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தொகுதி முழுவதும் புதிய ரூபாய் நோட்டுகள் கரைபுரண்டோடுகின்றன. அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் ரூ. 20 லட்சம் பதுக்கப்பட்டிருப்பதாக அவருடைய வீட்டை திமுகவினர் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அந்த வீட்டின் முன் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அதிகாரி இன்னும் இந்த வீட்டிற்கு வராத நிலையில் பணத்தை சம்பந்தப்பட்ட நபர்இடமாற்றம் செய்துவிட்டதாக திமுகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஆர்கே நகரில் ஆங்காங்கே போலீசாரின் உதவியுடன் ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ஆர்கே நகரில் ஆங்காங்கே காவல் நிலையங்களை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்திற்குள் ஊடகங்களுடன் நுழைந்து பண விநியோகம் செய்பவர்கள் மீது புகார் பதிய வலியுறுத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார். ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்த போது காவல்துறையினர் வழக்கு பதியவில்லை, அமைச்சர்கள் வீதி வீதியாக முகாமிட்டு பண விநியோகம் செய்து வருவதாகவும் மருதுகணேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
Comments